

உம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்துக்கு இடைக்கால நிவாரணமாக உடனடியாக ரூ.1,000 கோடி வழங்கப்படும். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான உம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் 20-ம் தேதி பிற்பகலில் மேற்கு வங்கம், வங்கதேசக் கடல் பகுதி வழியாகக் கரையைக் கடந்தது.
உம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு பர்கானா, தெற்கு 24 பர்கானா மாவட்டங்கள் முற்றிலும் நாசமடைந்துள்ளன. இந்த மாவட்டத்தை மறுகட்டமைப்பு செய்யும் அளவு புயல் கடும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. கொல்கத்தா, கிழக்கு மிட்னாபூர், ஹராவிலும் புயலால் சேதங்கள் ஏற்பட்டாலும் இரு மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் குறைவுதான்.
நார்த் 24 பர்கானாவில் 17 பேர், கொல்கத்தவில் 15 பேர், பசிராத்தில் 10 பேர், புயல் கரையைக் கடந்த சுந்தரவனக்காடுகள் அடங்கிய தெற்கு பர்கானாவில் 4 பேர் என மொத்தம் 80 பேர் புயலுக்குப் பலியாகியுள்ளனர் என மேற்கு வங்க அரசு தெரிவிக்கிறது.
லட்சக்கணக்கான வீடுகள், பாலங்கள், கடைகள் புயல் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
மேற்கு வங்கத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று காலை கொல்கத்தா புறப்பட்டார். கடந்த 83 நாட்களாக வெளிநாடு , வெளிமாநிலம் செல்லாமல் இருந்த பிரதமர் மோடி கொல்கத்தாவுக்குச் சென்றார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜெகதீப் ஆகியோர் வரவேற்றார். அதன் பின் தனி ஹெலிகாப்டரில் இருவரும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
அதன்பின் பிரதமர் மோடி ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''மேற்கு வங்கத்தில் புயலால் ஏற்பட்ட சேதத்தால் நிலவும் இக்கட்டான நேரத்தில் இந்த தேசமே துணை நிற்கும் என சகோதர, சகோதரிகளுக்குத் தெரிவிக்கிறேன். புயலால் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிட்ட பின், மாநிலத்துக்கு உடனடியாக இடைக்கால நிவாரணமாக ரூ.1,000 கோடி மத்திய அரசு சார்பில் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு இதே மே மாதத்தில் இந்த நாடே தேர்தலில் பரபரப்பாக இருந்தது. ஆனால் இப்போது மேற்கு வங்கத்தையும், ஒடிசாவையும் தாக்கிய புயலை எதிர்த்து நாங்கள் போராட வேண்டியதிருந்தது. இந்தப் புயல் நமது நாட்டின் கடற்கரைப் பகுதிகளை அதிகமாகப் பாதித்துள்ளது. மேற்கு வங்க மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் புயலால் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்து மதிப்பீடு செய்ய மத்திய அரசு சார்பில் குழு அனுப்பி வைக்கப்படும். புனரமைப்பு, மறுவாழ்வு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தொடரும், மேற்கு வங்கம் தொடர்ந்து முன்னோக்கி நகர வேண்டும்.
இந்தப் புயலால் உயிரிழந்தவர்களி்ன் குடும்பத்தினருக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணமும், மோசமான பாதிப்புக்குள்ளானவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.
கரோனா வைரஸுக்கு எதிராக மேற்கு வங்க மாநிலம் போராடியபோது இந்தப் புயலும் தாக்கிவிட்டது. இருப்பினும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மேற்கு வங்க அரசு புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாகச் செய்தார்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் மாநில அரசுக்குத் துணை நிற்போம்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.