

உம்பன் புயல் தாக்க கோர இரவை எதிர்கொண்ட கொல்கத்தா மக்கள் வியாழன் காலை விடியல் துயரமாக அமைந்தது. சமீபத்திய பொது நினைவில் இப்படிப்பட்ட அழிவு இருந்ததாக கொல்கத்தா மக்கள் உணரவில்லை.
காலையில் எழுந்து பார்த்தால் அனைத்துச் சாலைகளிலும் உம்பன் தாண்டவத்தினால் மரங்கள் விழுந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாகி விட்டதைக் கண்டனர், மின்சாரக் கம்பங்கள் வளைந்து நெளிந்து சாலையில் விழுந்து கிடந்ததைப் பார்த்தனர். பல பகுதிகள் நீரில் மிதந்து கொண்டிருக்கின்றன.
போக்குவரத்து கடும் பாதிப்பு:
சாலையில் ஒவ்வொரு 50 மீ தூரத்திலும் மரங்கள் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கிடந்ததை மக்கள் பார்த்தனர். நகரத்தின் முக்கிய ரத்த நாளங்களையே உம்பன் புயல் சேதம் செய்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொபைல், இண்டெர்நெட் இணைப்புகள் கிடைக்கவில்லை. விமானநிலையம் உட்பட பல தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
கொல்கத்தாவை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர சிறிது காலம் பிடிக்கும் என்கிறார் அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கிம். வடக்கில் டம் டம் முதல் தெற்கில் டாலிகஞ்ச், ஜாதவ்பூர் வரை மின்கம்பங்கள் உடைந்த காட்சிகளையும் மரங்கள் உடைந்து சாலையில் விழுந்து கிடக்கும் காட்சிகளையும் காண முடிந்தது. மத்திய சிகப்புச் சாலையில் பெரிய அளவில் மரங்கள் சாலையில் விழுந்துள்ளன.
கோவிட்-19 உடன் போராடும் மருத்துவமனைகள் சில உம்பன் ருத்ரத்தையும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. புதன் மதியம் 2.30 மணி முதல் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. 4 மணியளவில் கொல்கத்தாவில் அதன் வேகாவேசம் தெரிந்தது. மாலை 6 மணிக்கு அலிபோர் வானிலை மையம் மணிக்கு 112 கிமீ வேகம் என்று காற்றின் வேகத்தைப் பதிவு செய்தது.
7.20 மணியளவில் டம் டம் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 133 கிமீ ஆகப் பதிவானது. சில வீடுகளின் மேற்கூரைகள் அடுத்தடுத்து பறந்த புகைப்படத்தை முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் காட்டினார்.
மரம் மேலே விழுந்தோ, மின்சாரம் பாய்ந்தோ, வீடு இடிபாட்டிலோ மொத்தம் 15 பேர் கொல்கத்தாவில் பலியாகியுள்ளனர். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இறப்புச் செய்தி இருக்கிறது.
அடுத்த சில நாட்களுக்கு ஆயிரக்கணக்காக விழுந்த மரங்களை அப்புறப்படுத்துவதிலும் மின்விநியோகத்தையும் மீட்பதிலும் அதிகாரிகளுக்கு பெரும் பணி காத்திருக்கிறது.