

ஒரு உண்மையான தேசபக்தரின் மகன் என்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 1991-ம் ஆண்டு தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். ராஜிவ் காந்தியின் 29-வது நினைவு நாளான நேற்று பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், தனது தந்தையின் நினைவு தினம் குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில், “நான் உண்மையான தேசபக்தர் மற்றும் நல்ல தந்தையின் மகன் என்பதில் பெருமை கொள்கிறேன். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் சென்றார். நாட்டின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்தார். அவரின் நினைவு தினமான இன்று பாசத்துடனும் நன்றியுடனும் அவரை வணங்குகிறேன்” என்றார்.
காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ராஜீவின் வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும் ட்விட்டரில், "இளம் இந்தியாவின் நாடித்துடிப்பை உணர்ந்து அவர்களை பிரகாசமான எதிர்காலம் நோக்கி அழைத்துச் சென்றவர் ராஜீவ் காந்தி. இளைஞர்கள் மற்றும் முதியோரின் தேவையை நன்கு புரிந்துகொண்டவர். அனைவராலும் போற்றப்பட்டும் விரும்பப்பட்ட தலைவர் ராஜீவ் காந்தி. பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதிலும், அவர்களுக்கு சமூகத்தில் சம அந்தஸ்து கொடுப்பதிலும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் ராஜீவ்" என பதிவிடப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர், ராஜீவ் நினைவு நாளில் ட்விட்டரில் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.