

உணவுகளுக்கான ஆர்டர் பெற்று அதை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் செயலியைக் கொண்டுள்ள ஸ்விக்கி நிறுவனம், தற்போது மது பானங்களை வீடுகளுக்கு டெலிவரி செய்ய உள்ளது.
தற்போது ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் மதுபானங்களை வீடுகளுக்கு டெலிவரி செய்ய அனுமதி பெற்றுள்ளது. ராஞ்சியைத் தொடர்ந்து பிற நகரங்களுக்கு ஒரு வாரத்தில் படிப்படியாக இது விரிவுபடுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிற மாநில அரசுகளுடனும் இந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி மது பானசேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பான முறையில் மது பானங்களை வழங்குவதுதொடர்பாக, ஏற்கெனவே அமலில் உள்ள சட்ட விதிமுறைகள் கட்டாயம் அமல்படுத்தப்படும். அதாவது மது பானம் வாங்க ஆர்டர் அளித்தவரின் வயது உள்ளிட்ட விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட பிறகே வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீடுகளுக்கு வழங்குவதன் மூலம் கடைகளில் குவியும் கூட்டத்தைக் குறைக்க முடியும். இதன் மூலம் கரோனா பரவலைத் தடுக்கவும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும் முடியும் என்று ஸ்விக்கி நிறுவன துணைத் தலைவர் அனுஜ் ரதி தெரிவித்துள்ளார்.
இது தவிர மளிகைப் பொருட்களை டெலிவரி செய்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். ஸ்விக்கி செயலியில் மதுபான விநியோகத்துக்கு வைன் ஷாப்ஸ் என்ற பிரிவை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.