

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு செல்வோர் எண்ணிக்கை 40.32 சதவீதமாக உயர்ந்துள்ளது. லாக்டவுனை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தியுள்ளோம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
''மத்திய அரசு கரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டவுன் எடுத்த முடிவுகள், கையாண்ட வழிமுறைகள் குறித்து சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், லாக்டவுன் காலத்தை மத்திய அரசு மிகுந்த ஆக்கபூர்வமாகவே கையாண்டு, சுகாதாரக் கட்டமைப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை கரோனாவிலிருந்து 45 ஆயிரத்து 299 பேர் குணமடைந்துள்ளனர். இது 40.32 சதவீதம் மீள்வோர் கணக்காகும்
மே 21-ம் தேதிவரை 21 லட்சத்து 15 ஆயிரத்து 920 மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ன. அதில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 532 பேருக்கு 555 பரிசோதனை மையங்கள் மூலம் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் கரோனா பரிசோதனை நடத்தும் அளவு ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளது.
ஐசிஎம்ஆர், சுகாதாரத்துறை, தேசிய நோய்த் தடுப்பு மையம் ஆகியவற்றின் ஆதரவுடனும், மாநில அரசுகளின் சுகாதாரத்துறை, உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் கரோனாவை எதிர்கொண்டு வருகிறது.
இந்தியாவில் 3 ஆயிரத்து 27 கரோனா சிறப்பு மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 7 ஆயிரத்து 13 மையங்கள் கரோனா சுகாதார மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. 2.81 லட்சத்துக்கும் அதிகமான படுக்கைகள், 31 ஆயிரத்து 250 ஐசியு படுக்கை வசதிகள், 11 ஆயிரத்து 387 ஆக்சிஜன் வழங்கும் வசதியுடைய படுக்கைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் 65 லட்சம் பிபிஇ கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு கோடியே 10 லட்சம் என்95 முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்நாட்டிலேய நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பிபிஇ கவச உடைகளும், 3 லட்சம் என்95 முகக்கவசங்களும் தயார் செய்யப்படுகின்றன. ஆனால், கரோனாவுக்கு முன் இதுபோல் உற்பத்தி செய்யப்படவில்லை.
அனைத்துவிதமான தொற்றுநோய் தடுப்பு வல்லுநர்களுடனும் மத்திய அரசு கரோனாவைக் கட்டுப்படுத்த ஆலோசித்து வருகிறது. இதுவரை என்டிஎப் எனப்படும் தேசிய நோய்த் தடுப்புப் படையும், ஐசிஎம்ஆர் அமைப்பும் 20 ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி கரோனாவைக் கட்டுப்படுத்தி வருகின்றன''.
இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.