

உள்நாட்டு விமானப் போக்குவரத்து வரும் திங்கள்கிழமை முதல் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டது.
இதில் அனைத்து விமான நிறுவனங்களும் மூன்றில் ஒரு பங்கு விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும், குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் உள்நாட்டுப் பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சிறப்பு விமானங்கள், சரக்கு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை படிப்படியாகத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது.
அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறியாதாவது:
''வரும் 25-ம்தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து படிப்படியாகத் தொடங்கப்பட உள்ளது. மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட உள்ளன.
கரோனா பரவல் அச்சம் காரணமாக, முதியோர், கர்ப்பிணிப்பெண்கள், நீண்ட நாள் உடல்நலப்பிரச்சினை இருப்பவர்கள் விமானப் பயணத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கரோனா வைரஸ் பாதிப்பு நிறைந்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்பவர்களும் விமானப் பயணம் செய்யத் தடை செய்யப்படுகிறது. அனைத்துப் பயணிகளும் தங்கள் உடல்நலன் சார்ந்த தகவல்களை ஆரோக்கிய சேது செயலி மூலம் தெரிவிக்க வேண்டும் அல்லது சுயவிருப்பப் படிவத்தில் அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.
விமான நிலையத்தில் பயணிகள் அனைவருக்கும் உடல்ரீதியான பரிசோதனை நடத்தும் கவுன்ட்டர்கள் இயங்காததால் அவர்கள் வெப்-செக்கிங் கவுன்ட்டர்களுக்குச் செல்ல வேண்டும்
விமானத்தில் பயணிகளுக்கு உணவுகள் ஏதும் வழங்கப்படாது. அனைத்துப் பயணிகளின் உடல் வெப்பத்தைப் பரிசோதிக்கும் கருவி மூலம் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படுவார்கள். ஒரு பயணி தன்னுடன் ஒரு கைப்பை மட்டுமே எடுத்துவரலாம்.
அதேபோல கரோனா பாஸிட்டிவ் என அறிவிக்கப்பட்டவர்கள் விமானப்பயணம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். பயணிகள் விமான நிலையத்துக்குள் நுழையும் போதும், வெளியேறும் போதும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
விமானம் புறப்படும் 2 மணிநேரத்துக்கு முன்பாக பயணிகள் அனைவரும் விமான நிலையத்துக்கு வந்து விட வேண்டும், அனைத்துப்பயணிகளும் கண்டிப்பாக சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். பயணிகளுக்கு விமானத்தில் ஏறும் போதும், இறங்கும் போதும் பரிசோதனை நடத்தப்படும் அப்போது கரோனா அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்தும் முகாமுக்குச் செல்ல வேண்டும்.
இந்த விதிமுறைகள் அனைத்துக்கும் விமான நிறுவனங்களும், விமான நிலையங்களும் ஒத்துழைக்க வேண்டும். விமானப் பயண வழித்தடங்கள் நேரத்தின் அடிப்படையில் 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 30 நிமிடங்கள், 30 முதல் 60 நிமிடங்கள், 60 முதல் 90 நிமிடங்கள், 90 முதல் 120 நிமிடங்கள், 120-150 நிமிடங்கள், 150 -180, 180 முதல் 210 நிமிடங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் நோக்கம் டிக்கெட் கட்டணத்தை முறைப்படுத்தத்தான்.
விமானத்தில் உள்ள இருக்கையில் 40 சதவீதம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் விற்கப்பட வேண்டும். மீதமுள்ள இருக்கைகளுக்கு விமான நிறுவனம் நிர்ணயிக்கலாம். இவை அடுத்த 3 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும்''.
இவ்வாறு அமைச்சர் ஹர்திப்சிங் பூரி தெரிவித்தார்.