

உம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்குவங்கத்திற்கு ஒட்டுமொத்த நாடும் துணை நிற்கும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான உம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் நேற்று பிற்பகலில் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. புயல் பிற்பகல் 2.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய நிலையில் கரையை கடந்து முடிக்க 4 மணிநேரத்திற்கும் அதிகமானது. மேற்குவங்கத்தின் கடல் பகுதி மட்டுமின்றி வங்கதேசத்தின் கடல் பகுதி வழியாகவும் உம்பன் புயல் கரையை கடந்தது.
மேற்குவங்கத்தில் புயல் கரையை கடந்த பகுதி சுந்தர வனக்காடுகள் அதிகம் கொண்ட இடமாகும். உம்பன் புயல் கரையை கடந்தபோது கொல்கத்தாவில் கடும் சூறாவளி காற்று வீசியது. மேற்குவங்க கடலோராத்தில் 5 மீ்ட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுப்பின.
மேற்குவங்க மாநிலத்தில் 5 லட்சம் பேரும், ஒடிசா மாநிலத்தில் 1.5 லட்சம் பேரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்ப்டடுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை உடனடியாக தொடங்கினர். புயல் கரையை கடந்தபகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில் ‘‘மேற்குவங்கத்தில் உம்பன் புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை நாம் பார்த்தோம். இது நமக்கு சவாலான நேரம். ஒட்டுமொத்த நாடும் மேற்குவங்கத்திற்கு துணை நிற்கும். புயல் பாதிப்பில் இருந்து மேற்குவங்க மக்கள் மீண்டு வர பிராத்திப்போம். நிலைமை சீரடைவதை உறுதிப்படுத்துவோம்’’எனக் கூறியுள்ளார்.