கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்துக்கு வருவதிலிருந்து விலக்கு: மத்திய அமைச்சர் அறிவிப்பு

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் : கோப்புப்படம்
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் : கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனின் 4-வது கட்டத்தில் 50 சதவீத அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளநிலையில், கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 4-வது கட்ட லாக்டவுன் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த உத்தரவிலிருந்து சற்று திருத்தம் செய்து, கர்ப்பணிப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அரசுப் பணியில் இருந்தால், அவர்கள் அலுவலகத்துக்கு வரத் தேவையில்லை. வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்று மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இதுகுறித்து மத்தியப் பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ 4-வது லாக்டவுன் காலகட்டத்தில் மத்திய அரசு, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களில் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் இருந்தால், அவர்கள் அலுவலகத்துக்கு வரத் தேவையில்லை. மகப்பேறு விடுப்பில் இருக்கும் பெண் ஊழியர்களும் அலுவலகத்துக்கு வரத் தேவையில்லை.

அதேபோல ஏற்கெனவே உடல்ரீதியான பிரச்சினைகளுக்கு அதாவது இதய நோய், நீரிழிவு, ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற தீவிர நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை எடுத்துவரும் அரசு ஊழியர்களும் அலுவலகத்துக்கு வரத் தேவையில்லை.

அலுவலகத்துக்கு வரும் பணியாளர்கள் சரியான பணி நேரத்துக்கு உள்ளே வந்து, சரியான நேரத்துக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். கூட்டமாக நின்று ஊழியர்கள் பேசுவதைத் தவிர்க்குமாறு அனைத்துத் துறைத் தலைவர்களும் அறிவுறுத்த உத்தரவிடப்படுகின்றனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு தரப்பினரும், காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஒரு தரப்பினும் பணிக்கு வரலாம்.

துணைச் செயலாளர் மற்றும் அதற்கு மேல் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிகள் நாள்தோறும் பணிக்கு வர வேண்டும். துணைச் செயலாளர் அந்தஸ்துக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் அலுவலகம் வர வேண்டும். அலுவலகம் வராத நாட்களில் பணியை வீட்டிலிருந்தவாறு செய்யலாம்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள ஊழியர்கள் லாக்டவுன் காலத்தில் கூட முழு ஈடுபாட்டுடன் பணிபுரிந்ததை வரவேற்கிறேன். வார விடுமுறை நாட்களில்கூடப் பணிபுரியாத பணியாளர்கள் பலர் வார இறுதி நாட்களில் வீடுகளில் இருந்தவாறு பணியாற்றியது பெருமையாக இருக்கிறது''.

இவ்வாறு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in