

2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்துப் போட்டியிட முயன்று வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட முன்னாள் பிஎஸ்எப் வீரர் தேஜ் பகதூர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
தேர்தல் ஆணையம் தனது வேட்புமனுவைத் தள்ளுபடி செய்ததற்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தேஜ் பகதூர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தேஜ்பகதூர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு கடந்த 18-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது முழுமையான அமர்வு இல்லாததால் மனுவை விசாரிக்க முடியாது என்று தெரிவித்தார். இதனால் நாளை (22-ம் தேதி) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த தேஜ் பகதூர், வீரர்களுக்கு மோசமான உணவு வழங்கப்படுகிறது என்று குற்றம் சாட்டி கடந்த 2017-ம் ஆண்டு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தேஜ்பகதூர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து சமாஜ்வாதிக் கட்சியில் தேஜ் பகதூர் இணைந்தார். 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் தேஜ் பகதூரை நிறுத்தியது சமாஜ்வாதி கட்சி.
ஆனால் தேஜ்பகதூர் வேட்புமனுத் தாக்கலின்போது, மனுவை பரிசீலித்த தேர்தல் அதிகாரி மனுவை தள்ளுபடி செய்தார். அந்த மனுவில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தேஜ்பகதூர் ஊழலால் பதவி நீக்கம் செய்யப்படவில்லை அல்லது ஒழுக்கக்குறைவால் பதவி நீக்கம் செய்யப்படவில்லை எனும் சான்றிதழ் இணைக்கத் தவறிவிட்டதால் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து தேஜ்பகதூர் தேர்தல் அதிகாரியின் உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி தள்ளுபடி செய்தது.
வாரணாசி தொகுதியில் போட்டியிடும் தேஜ்பகதூர் அந்தத் தொகுதியைச் சேர்ந்தவரும் இல்லை, பதிவு செய்யப்பட்ட வாக்காளரும் இல்லை எனக் கூறிய அலகாபாத் உயர் நீதிமன்றம் தேஜ்பகதூர் மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தேஜ்பகதூர் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், “ தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிடும் ஒருவர் அந்தத் தொகுதியைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். அந்த ஊரைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. எந்தத் தொகுதியில் பிறந்த இந்தியக் குடிமகனும் தேர்தலில் போட்டியிட உரிமையுண்டு. ஆனால், எனது மனுவை இந்தக் காரணத்தைக் கூறி தள்ளுபடி செய்த தேர்தல் அதிகாரி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வாரணாசி தொகுதியில் யாரும் எம்.பி. இல்லை என்று அறிவிக்க வேண்டும” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.