Last Updated : 21 May, 2020 10:43 AM

 

Published : 21 May 2020 10:43 AM
Last Updated : 21 May 2020 10:43 AM

இந்திய எல்லைகளைத் திருத்திய செயலை ஏற்க முடியாது: நேபாளத்துக்கு இந்தியா கடும் கண்டனம்

இந்தியாவின் எல்லைப் பகுதிகளான லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி ஆகிய பகுதிகளை நேபாள அரசு தனது எல்லைப்பகுதியாகச் சித்தரித்து தனது புதிய நிலவரைபடத்தில் குறிப்பிட்டுள்ளதற்கு இந்தியா கடும் கோபத்துடன் கண்டித்துள்ளது.

நேபாளத்தின் இந்தச் செயலை ஏற்க முடியாது. செயற்கையாக அதன் எல்லையை விரிவுபடுத்தியுள்ளது. நியாயமற்ற இந்த வரைபடம் தடுக்கப்பட வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டித்துள்ளது.

நேபாள நில திருத்தத்துறை அமைச்சர் பத்மா அர்யால் நேற்று காத்மாண்டு நகரில் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த போது அந்நாட்டின் திருத்தப்பட்ட அரசியல், நிர்வாக ரீதியான வரைபடத்தை வெளியிட்டார். அதில் இந்தியாவின் எல்லைப் பகுதிகளான லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி ஆகிய பகுதிகளை நேபாள அரசு தனது எல்லைப்பகுதியாக சித்தரித்திருந்தது.

ஏற்கெனவே கடந்த 8-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலம், தார்சுலாவிலிருந்து லிபுலேக் பகுதியை இணைக்கும் 80 கி.மீ. சாலையை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்தவைத்தபோது நேபாள அரசு அதிருப்தி தெரிவித்திருந்தது.

இந்தியா புதிதாக அமைத்துள்ள 80 கி.மீ. சாலை எங்கள் எல்லைக்குள் வருகிறது என்று நேபாள அரசு குற்றம் சாட்டியது. ஆனால், அதை மறுத்த மத்திய அரசு முழுவதும் அந்த சாலை இந்தியாவின் எல்லைக்குள் மட்டுமே இருக்கிறது என உறுதி செய்தது.

இது தொடர்பாக இந்தியத் தூதர் வினய் மோகன் வத்ராவுக்கு சம்மன் அனுப்பிய நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் கவாலி, இந்தியாவின் செயலுக்குக் கண்டனத்தைத் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த இந்திய ராணுவத் தலைவர் எம்எம் நரவானே, “நேபாளத்தின் செயலுக்குப் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள், இது சீனாவாக இருக்கலாம்” எனக் குற்றம் சாட்டினார்.

நேபாளம் மற்றும் இந்தியா எல்லைகளுக்கு இடையே இருக்கும் மேற்குப்பகுதிதான் கலாபானி. இரு நாடுகளும் கலாபானியை தங்கள் பகுதியாக உரிமை கொண்டாடுகின்றன. இதனால் இரு நாடுகளுக்கு இடையே சர்ச்சை நீடித்து வருகிறது.

இந்தசூழலில் கடந்த செவ்வாய்க்கிழமை நேபாள நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் கே.பி.சர்மா ஒளி, “லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை இந்தியாவிடம் இருந்து ராஜதந்திர முறையில், நிர்வாக ரீதியாக மீட்டெடுப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் நேபாள நில திருத்தத்துறை அமைச்சர் பத்மா அர்யால் நேற்று காத்மாண்டு நகரில் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த போது அந்நாட்டின் திருத்தப்பட்ட அரசியல், நிர்வாக ரீதியான வரைபடத்தை வெளியிட்டார். அதில், இந்தியாவின் எல்லைப்பகுதிகளான லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி ஆகிய பகுதிகளை நேபாள அரசு தனது எல்லைப் பகுதியாக சித்தரித்திருந்தது.

மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா: கோப்புப்படம்

இந்த வரைபடத்தை வெளியிட்ட சிறிது நேரத்தில் மத்திய அரசு கடும் எதிர்ப்பை நேபாளத்துக்கு தெரிவித்தது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா ஊடகங்களிடம் கூறுகையில், “நேபாள அரசு திருத்தப்பட்ட எல்லைகளை வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குரியது. அதில் இந்தியாவின் எல்லைப்பகுதிகளாக இருந்து வரும் லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி ஆகிய பகுதிகளை நேபாள அரசு தனது எல்லைப்பகுதியாக சித்தரிக்கிறது. இந்தியாவின் இறையாண்மையையும், எல்லைப்புற மரியாதையும் மதிக்க வேண்டும் என நேபாளத்துக்கு வலியுறுத்துகிறோம்.

நேபாளத்தின் இந்த தன்னிச்சையான செயல் வரலாற்று உண்மைகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் இல்லை. இரு நாடுகளுக்கு இடையிலான நிலுவையில் இருக்கும் எல்லைப்புற சிக்கல்களை பேசித் தீர்ப்பதற்கு எதிராக இருக்கிறது. இதுபோன்ற செயற்கையாக தனது எல்லையை விரிவுபடுத்திக்காட்டும் நேபாளத்தின் செயலை ஒருபோதும் இந்தியா ஏற்காது .

இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துவருவது நேபாளத்துக்குத் தெரியும். நியாயமற்ற வரைபடத்தின் மூலம் நிலப்பகுதிகளை தங்களுடையதாக காட்டும் நேபாளத்தின் செயல் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். நிலுவையில் இருக்கும் எல்லைப் பிரச்சினைகளை சுமுகமான முறையில் தீர்க்க நேபாள நாட்டின் தலைவர்கள் சாதகமான சூழலை ஏற்படுத்துவார்கள் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x