

எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி வழங்கும் கல்விக் கொள்கை விரைவில் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கத்தாரியா, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது: எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி வழங்கும் கல்வி கொள்கையை கடந்த அரசு அமல்படுத்தியது. இதனால் தொடக்கக் கல்வியின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமங்களில் மாணவ, மாணவியரின் கல்வித் திறன் குறைந் துள்ளது.
கட்டாய தேர்ச்சி மூலம் 9-ம் வகுப்பு வரை முன்னேறும் மாணவர்கள் அதன்பின்னர் தொடர்ச்சியாக தோல்வி அடைகின்றனர். இளம் பருவத்திலேயே மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த வேண் டியது அவசியம். எனவே எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் கல்வி கொள்கையை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
மேலாண்மை கல்வி நிறுவன மசோதாவால் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களின் சுயாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதேநேரம் ஐ.ஐ.எம். நிர்வாகங்கள் வரம்பு மீறி செயல்படவும் அனுமதிக்கமாட்டோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) கலைக்கப்படக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வருவது குறித்து அமைச்சரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, யு.ஜி.சி.யை கலைக்கும் திட்டம் இல்லை என்று பதிலளித்தார்.