Last Updated : 21 May, 2020 10:07 AM

 

Published : 21 May 2020 10:07 AM
Last Updated : 21 May 2020 10:07 AM

நான்காவது கட்ட ஊரடங்கு அமல் காலத்தில் உத்தரபிரதேசத்தில் மது விற்பனை சரிந்தது: கடைகளின் உரிமக் கட்டணத்தை குறைக்க கோரிக்கை

உத்தரபிரதேசத்தில் நான்காவது கட்டமாக அமலில் உள்ள ஊரடங்கு காலத்தில் மதுபான விற்பனை சரிந்துள்ளது. இதனால், உரிமக் கட்டணத்தை குறைக்குமாறு கடைஉரிமையாளர்கள் மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ஊரடங்கால் நாடு முழுவதும்மதுக்கடைகளும் மூடப்பட்டன.கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், உ.பி.யில் மே 5-ம் தேதி மதுக் கடைகள் திறக்கப்பட்டன. மூடப்பட்டிருந்த 41 நாட்களில் மதுபானம் விற்பனையாகி இருக்க வேண்டிய அளவுக்கு, முதல் வாரத்திலேயே நடைபெற்றது. இதை எதிர்பார்த்து மாநில அரசும் மதுபானங்கள் விலையை உயர்த்தியது.

இந்த சூழலில் உத்தரபிரதேசத்திலும் ஊரடங்கு 4-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆயினும், மது, பீர் விற்பனை வழக்கமான அளவைவிட சரிந்துள்ளது. இதனால், சராசரி மாதாந்திர விற்பனையான ரூ.2.5 ஆயிரம் கோடி முதல் ரூ.3 ஆயிரம் கோடி வரையிலான அளவை எட்ட முடியாத நிலை உள்ளது. மேலும் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உபி மதுக்கடைகள் இதுவரை ரூ.5.7 கோடி செலவிட்டுள்ளன.

இந்த சூழலில் கடை உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் லக்னோவில் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. அதில் கடைகளின் உரிமக் கட்டணத்தை மாநில அரசு குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்' நாளேட்டிடம் மதுக்கடை வியாபாரிகள் சமூகநல சங்கத்தின் தலைவர் எஸ்.பி.சிங் கூறும்போது, “மது விற்பனை வழக்கமாக மாலை 7.00 மணி முதல் 10.00 மணி சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கும்அனுமதி இல்லை. ஊரகப்பகுதிகளில் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இவையெல்லாம் மது விற்பனை சரிவுக்கு காரணம்” என்றார்.

மாநில அரசு பரிசீலனை

இதனிடையே, உபி மாநில அரசுதரப்பில் தற்போதைய மது விற்பனை தொடர்பான புள்ளிவிவரங்கள் தொகுக்கப்படுகின்றன. இதில் மது கடை உரிமையாளர்கள் முன்வைக்கும் புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. எனவே, ஊரடங்கு காலகட்டத்தில் மட்டும்மதுக் கடை உரிமக் கட்டணங்களை ரத்து செய்ய உபி அரசு திட்டமிட்டுள்ளது. இத்துடன், தலாஒருவருக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ள மது அளவு வரம்பை தளர்த்தவும் மாநில ஆலோசனை செய்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x