

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள சூப்பர் புயல் உம்பன் மேற்குவங்க மாநிலம் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் அருகே கரையை கடக்கத் தொடங்கியது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள உம்பன் புயல் அதிதீவிரமடைந்து, சூப்பர் புயலாக மாறியது. இன்று நண்பகல் நிலவரப்படி வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான உம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் காற்று இப்போது வடக்கு- வடகிழக்கை நோக்கி நகர்ந்துள்ளது. இதன் வேகம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கிலோ மீட்டர் என்றளவில் இருந்தது.
இது 19.8 டிகிரி அட்ச ரேகையிலும் 87.7 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் உள்ளது. இது ஏறக்குறைய பாராதீப் ( ஒடிஸா) அருகே 120 கிழக்கு – தென்கிழக்கில் இருந்தது. மேற்கு வங்க மாநிலம் திஹாவுக்கு தெற்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும், கேப்புபாரா ( வங்க தேசம்)வுக்கு 360 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
இது வங்களா விரிகுடாவுக்கு வடக்கு-வடகிழக்கு பகுதியை நோக்கி நகரந்து மேற்கு வங்க மற்றும் வங்க தேசத்தின் திஹா (மேற்கு வங்கம்) மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் ( வங்க தேசம்) இன்று மாலை கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பிற்பகல் முதல் புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது.
இதனால் காற்றின் வேகம் மணிக்கு 155-165 கிலோ மீட்டராக உள்ளது. வேகம் படிப்படியாக அதிகரித்து மணிக்கு 185 கிலோ மீட்டராக உயரக்கூடும் என தெரிகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசாவின் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக கன மழை முதல் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு வங்கத்தின் கடலோர பகுதியில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. மணிக்கு 100-110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
ஒடிசா மற்றும் கடலோர மாவட்ட பகுதிகளில் இது மணிக்கு 125 கிலோ மீட்டர் சூறாவளி காற்று வேகத்தை எட்டவும் கூடும். ஒடிஸா மற்றும் தெற்கு கடலோர மாவட்ட உள்பகுதிகளில் இது மணிக்கு 55-65 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும்.