Published : 20 May 2020 04:06 PM
Last Updated : 20 May 2020 04:06 PM

வளைகுடாவில் இருக்கும் கேரள மாணவர்களுக்கு அங்கேயே  நீட் தேர்வு மையம்: பினராயி விஜயன் கோரிக்கை

கரோனா தொற்று நிலவரங்கள் குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளைகுடா நாடுகளில் நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறினார்.

செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:
’‘கேரளத்தில் செவ்வாய்க்கிழமை அன்று 12 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று யாரும் நோயிலிருந்து குணமடையவில்லை. நேற்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் 5 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 3 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், தலா ஒருவர் பத்தனம்திட்டா, ஆலப்புழா, திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள்.

தொற்று உறுதிசெய்யப்பட்ட அனைவரும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். வெளிநாடுகளிலிருந்து வந்த 4 பேருக்கும், மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வந்த 6 பேருக்கும், குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த தலா ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கேரளத்தில் 642 பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் தற்போது 142 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 72,000 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 71,545 பேர் வீடுகளிலும், 455 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். இன்று கரோனா அறிகுறிகளுடன் 119 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 46,958 பேரிடம் உமிழ்நீர் மாதிரிகளைப் பரிசோதித்ததில் 45,527 பேருக்குக் கரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. மாநிலத்தில் நோய்த் தீவிரம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பானூர், சொக்லி, மய்யில் மற்றும் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கோருத்தோடு ஆகிய இடங்கள் நோய்த் தீவிரப் பகுதிக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. கேரளத்தில் இதுவரை சமூகப் பரவல் ஏற்படவில்லை. சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக முதியோர், நோய் எளிதில் பரவக்கூடியவர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என 5,630 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 4 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் கேரளத்தில் சமூகப் பரவல் இல்லை என்பது உறுதியாகிறது.

இதுவரை கேரளத்துக்கு விமானம், கப்பல் மற்றும் சாலை வழியாக 74,426 பேர் வந்துள்ளனர். இவர்களில் 44,712 பேர் சிவப்பு மண்டலம் அமைந்துள்ள மாவட்டங்களிலிருந்து வந்துள்ளனர். சாலை வழியாக 63,239 பேர் வந்துள்ளனர். சாலை வழியாக வந்தவர்களில் 46 பேருக்கும், விமானம் மூலம் வந்தவர்களில் 53 பேருக்கும், கப்பல் மூலம் வந்தவர்களில் 6 பேருக்கும் கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து கேரளத்துக்கு, புதன்கிழமை மாலை 6 மணிக்கு ஏசி இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வியாழன் முதல் தினமும் பெங்களூருவிலிருந்து கேரளத்துக்கு ஏசி இல்லாத சேர் கேர் ரயில் இயக்கப்படும்.

பொது முடக்கம் அமலில் உள்ள இந்த நேரத்தில் சில டியூஷன் சென்டர்கள் செயல்பட்டு வருவதாகத் தகவல் வந்துள்ளது. இதை அனுமதிக்க முடியாது. பள்ளிகள் திறக்கும்போதுதான் டியூஷன் சென்டர்களும் செயல்பட வேண்டும். ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துவதில் தவறில்லை.

தற்போது தனியார் மருத்துவமனைகளில் நெரிசல் அதிகரித்துவருகிறது. மருத்துவமனைகளில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். பல சாலையோரக் கடைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடுவதாகக் கூறப்படுகிறது. இதை அனுமதிக்க முடியாது. ஓட்டல்களில் பார்சல் வழங்க மட்டுமே அனுமதி உண்டு.

ஒன்றுக்கு மேல் மாடிகளைக் கொண்ட துணிக் கடைகள் மற்றும் மொத்த துணிக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படும். போட்டோ ஸ்டூடியோக்களைத் திறக்கலாம். கடைகள் மற்றும் பொது இடங்களுக்கு 10 வயதுக்குக் குறைவான குழந்தைகளை எந்தக் காரணம் கொண்டும் அழைத்துச் செல்லக் கூடாது.

ஜூலை 26-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு வளைகுடா நாடுகளில் உள்ள கேரளத்தைச் சேர்ந்த மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். தற்போது பொது முடக்கத்தில் ஏராளமான மாணவர்கள் தேர்வு எழுத வர முடியாமல் அங்கேயே சிக்கியுள்ளனர். எனவே, வளைகுடா நாடுகளில் நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.’’

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x