

ஃபைஸல் சித்திக் என்பவர் இந்தியாவில் டிக் டாக்கில் மிகப் பிரபலம். இவரை டிக் டாக்கில் 1.34 கோடி பயனர்கள் தொடர்கின்றனர். இவர் சமீபத்தில் ஒரு வீடியோவில், ஒரு பெண்ணின் மீது ஆசிட் அடிப்பது போலவும், அதன் பிறகு அந்தப் பெண்ணின் முகம் எப்படி சிதைந்துள்ளது என்பதையும் காட்டியிருந்தார்.
இந்த வீடியோ, குறிப்பிட்ட அந்தப் பெண்ணின் ஒப்பனைத் திறமையைக் காட்டவே எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் இந்த வீடியோவால் சர்ச்சை வெடித்தது. இந்த வீடியோவை வெளியிட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் அந்தப் பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசுகையில், ‘நீ யாருக்காக என்னை விட்டுச் சென்றாயோ, அவன் உன்னை விட்டுச் சென்றுவிட்டானா?’ என்று ஃபைஸல் சித்திக் அந்தப் பெண்ணிடம் கேட்கிறார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து இதுபோன்ற வீடியோக்களை ஊக்குவிக்கும் டிக் டாக் செயலியைத் தடை செய்யவேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்நிலையில் இந்த வீடியோவை வெளியிட்ட ஃபைஸல் சித்திக்கின் கணக்கை டிக் டாக் நிறுவனம் நீக்கியுள்ளது. இது குறித்து டிக் டாக் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
''எங்கள் நிர்வாகத்தின் வீடியோ பொறுப்பாளர்கள் அந்த வீடியோவை நீக்கியதுடன் சம்பந்தப்பட்ட நபரின் கணக்கை முடக்கியுள்ளனர். அது மட்டுமின்றி இதற்கான சட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
டிக் டாக்கில் மக்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை வழங்குகிறோம். அதை எங்கள் விதிமுறை வழிகாட்டுதல்களில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். எங்கள் விதிமுறைகளின்படி அடுத்தவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், உடல்ரீதியான தாக்குதலை ஊக்குவிப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிப்பது, போன்றவற்றை நாங்கள் அனுமதிப்பதில்லை.
எங்கள் விதிமுறைகளை மீறியதால் அந்த வீடியோவை நாங்கள் அந்த வீடியோவை நீக்கியதுடன் சம்பந்தப்பட்ட நபரின் கணக்கை முடக்கியுள்ளோம். அது மட்டுமின்றி இதற்கான சட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்''.
இவ்வாறு டிக் டாக் தரப்பில் கூறப்பட்டுள்ளது.