Last Updated : 20 May, 2020 07:58 AM

 

Published : 20 May 2020 07:58 AM
Last Updated : 20 May 2020 07:58 AM

கரோனா காலகட்டத்தில் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குக்கு உதவும் டெல்லி காவல் துறை

கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளை செய்ய அவர்களது குடும்பத்தார்களே அச்சப்படும் சூழலில் டெல்லியில் இறப்பவர்களின் பலரது இறுதிச் சடங்குகளை அம்மாநிலக் காவல் துறையினர் முன்வந்து செய்வது நெகிழ்ச்சிக்குரிய செயலாகப் பாராட்டப்படுகிறது.

டெல்லியின் தென்கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஜைத்பூர் காவல் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் என்பவர் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், "உடல்நலம் குன்றிய எனது மனைவி சுதா(66) இறந்துவிட்டார். எங்களுக்கு 25 வயதில் மகன் ஒருவன் உள்ளான். அவன் மனநலம் குன்றியவன். இறந்த எனது மனைவிக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சி அண்டை வீட்டாரும் கூட இறுதிச் சடங்கு செய்வதற்கு உதவ முன்வராமல் ஒதுங்கி விட்டனர்" எனக் கூறியிருந்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் ஜஸ்பாலுக்கு உதவ முன்வந்தனர். காவலர்களான சுனில், பர்வீன், தர்மேந்திரா மற்றும் ராகுல் ஆகியோர்ஜஸ்பாலுடன் அவரது வீட்டிற்கு சென்று சுதாவின் உடலை தங்கள் தோள்களில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுடுகாட்டிற்கு சுமந்து சென்று இறுதி காரியங்கள் செய்து முடித்தனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் தென்கிழக்கு மாவட்ட காவல் துறையின் துணை ஆணையரான ஆர்.பி.மீனா கூறும்போது, "தற்போதை்ய காலகட்டத்தில் பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் தொற்று குறித்த அச்சம்அதிகரித்துள்ளது. இதனால்காவல் துறையே அனைத்து வகையான உதவிகளும் செய்ய வேண்டியதாக உள்ளது. இதில்,புரோகிதரை அழைத்து வருவதுமுதல் உடலுக்கு தீ வைத்து இறுதி காரியம் முடியும் வரை அனைத்தையும் ஜைத்பூர் காவல்நிலையத்தாரே செய்துள்ளனர்" என்றார்.

அனைத்து மதத்தினருக்கும்..

வைரஸால் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைத்து மதத்தினரின் இறுதிச் சடங்குகளுக்கும் காவல் துறையினரே உதவி வருகின்றனர். இதற்கு அவர்களது குடும்பத்தாரும் பல சமயம் முன்வராததும் காரணமாக உள்ளது.

இதனால், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பொதுமக்களின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த டெல்லி காவல் துறை கரோனா காலகட்டத்தில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x