

பிஹார் மாநிலத்தில் கரோனா தனிமைப்படுத்தும் மையத்தில் பொழுது போக்கிற்காக வெளியே இருந்து பெண்களை அழைத்து வந்து நடன நிகழ்ச்சி நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டது. எனினும் பல மாநிலங்களிலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள், வெளியூர்களி்ல் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தும் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் பிஹார் மநாிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் காராகா என்ற இடத்திலும் மாநில அரசின் சார்பில் கரோனா தனிமைப்படுத்துதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கரோனா அறிகுறி உள்ளதாக சந்தேகிக்கப்படுபவர்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று இரவு அங்கு நடன நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அங்கிருந்த சிலர் பொழுது போக்கிற்காக பெண்களை அழைத்து வந்து இந்த நடன நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்த தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கூடுதல் ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். அவர் கூறுகையில் ‘‘கரோனா தனிமைப்படுத்தும் மையத்தில் இதுபோன்ற நடன நிகழ்ச்சி நடத்தியதை ஏற்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனிமைப்படுத்தும் மையங்களில இனிமேல் பொழுது போக்கிற்காக டிவி பெட்டிகள் வைக்கப்படும்’’ எனக் கூறினார்.