Last Updated : 19 May, 2020 05:47 PM

 

Published : 19 May 2020 05:47 PM
Last Updated : 19 May 2020 05:47 PM

அலுவலகத்தையே மூடவேண்டாம்; சிலர் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டாலும் பணியைத் தொடரலாம்: சுகாதாரத்துறை அமைச்சகம் புதிய விளக்கம்

ஒரு அலுவலகத்தில் ஒருசில ஊழியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டால் , அந்த அலுலகத்தையே மூட வேண்டிய அவசியமில்லை. முறைப்படி கிருமிநாசினி தெளித்துப் பணியைத் தொடரலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று புதிய விளக்கத்தை அளித்துள்ளது.

பணியிடங்களில் சுகாதார ரீதியில் எந்தமாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''ஒரு அலுவலகத்தில் ஒருசில ஊழியர்கள் கரோனவால் பாதிக்கப்பட்டால் , அந்த அலுலகத்தையே மூட வேண்டிய அவசியமில்லை. முறைப்படி கிருமிநாசினி தெளித்துப் பணியைத் தொடரலாம்.

ஒருவேளை ஒரு அலுவலகத்தில் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டால் மட்டுமே ஒட்டுமொத்த அலுவலகத்தையும் 48 மணிநேரத்துக்கு மூடிவைக்க வேண்டும். போதுமான அளவு கிருமிநாசினி தெளித்து, பணியாற்ற உகந்த சூழல் வரும் வரை ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு செய்யலாம்.

ஒரு பணியாளர் ஃப்ளூ காய்ச்சல் அல்லது தொடர் இருமலுடன் இருந்தால் அவர் பணிக்கு வரக்கூடாது. உள்ளூர் மருத்துவ அதிகாரிகளிடம் ஆலோசனை பெறலாம். ஒருவேளை கரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

ஒரு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் வசிக்கும் வீடு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் இருந்தால், அவரை வீட்டிலிருந்தே பணியாற்ற நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்.

கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பவராக ஒரு ஊழியர் இருந்தால் அந்த ஊழியரை 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி, ஐசிஎம்ஆர் விதிமுறைப்படி அவருக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

ஒருவேளை கரோனா நோயாளியுடன் குறைந்த அளவிலான தொடர்பில் ஒரு ஊழியர் இருப்பதாகத் தெரிந்தால் அவரைத் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கலாம். ஆனால், அந்த ஊழியரின் உடல்நிலையை அவரின் மேலதிகாரி அல்லது நிர்வாகம் 14 நாட்கள் கண்காணிக்க வேண்டும்.

அலுவலகம் அல்லது பணிபுரியும் இடங்களில் தொழிலாளர்கள் நெருக்கமாக அமரும் நிலை, கேன்டீன், கூட்ட அரங்கு, மாடிப்படிகள் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது ஊழியர்களுக்கு இடையே கரோனா வேகமாகப் பரவும் வாய்ப்புள்ளது.

ஒரு அறையில் பணியாற்றும் ஊழியர்களில் ஒருவருக்குக் கரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அந்த பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே வேறு அறைக்கு மாற்றப்பட வேண்டும். அந்தப் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவர் பரிசோதிக்கும் வரை அந்த அறையில் உள்ள மற்ற ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்றலாம்.

குறைந்தபட்சம் ஊழியர்களுக்கு இடையே ஒரு மீட்டர் இடைவெளி, முகக்கவசம், அடிக்கடி கைகளைக் கழுவுதல், கைகளில் சானிடைசர் அடிக்கடி பயன்படுத்துதல் போன்றவை பாதுகாப்பு வழிமுறையாகும்''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x