மேற்குவங்கத்தை மிரட்டும் உம்பன் புயல்: 3 லட்சம் பேர் வெளியேற்றம்

மேற்குவங்கத்தை மிரட்டும் உம்பன் புயல்: 3 லட்சம் பேர் வெளியேற்றம்
Updated on
1 min read

வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதியில் உருவெடுத்துள்ள கடும் சூறாவளிப் புயல் உம்பன், மேற்கு வங்க மாநிலத்தை மிரட்டி வரும் நிலையில் அங்கு கடற்கரைப்பகுதியில் வசிக்கும் 3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தையொட்டிய வங்காள விரிகுடா கடலில் மையம் கொண்டுள்ள உம்பன் கடும் சூறாவளிப் புயலானது, கடந்த 6 மணி நேரத்தில், வடக்கு – வடகிழக்கு திசையில், மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வங்காள விரிகுடாவின் மேற்கு மத்தியப் பகுதியில், தெற்கு பாரதீப் (ஒடிசா)வுக்கு 480 கீ.மீ தொலைவிலும், தெற்கு-தென்மேற்கு திகா-வுக்கு (மேற்குவங்கம்) 630 கி.மீ தொலைவிலும் மற்றும் தெற்கு மற்றும் தென்-மேற்கு கேபுபாரா (வங்கதேசம்) 750 கி.மீ தொலைவிலும் இன்று காலை 8.30 மணிக்கு மையம் கொண்டிருந்தது.

இது வங்கக் கடலின் வடமேற்குக்கு குறுக்கே வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம்-வங்கதேசம் கடலோரப் பகுதியில் திகா(மேற்கு வங்கம்) மற்றும் ஹதியா தீவுகள்(வங்க தேசம்) அருகே சுந்தர்பன்ஸ் பகுதியில் மே 20ம் தேதி மதியம் அல்லது மாலை அதி தீவிர புயலாக மணிக்கு அதிகபட்சம் 165-195 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் எனத் தெரிகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள டோப்ளர் வானிலை ரேடார் மூலம் உம்பன் கடும் சூறாவளிப் புயல் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இதையடுத்து புயல் காரணமாக மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

உம்பன் புயல் மேற்கு வங்க மாநிலத்தை மிரட்டி வரும் நிலையில் அங்கு கடற்கரைப்பகுதியில் வசிக்கும் 3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in