Published : 19 May 2020 03:46 PM
Last Updated : 19 May 2020 03:46 PM

நீடித்த துயரம்: மார்ச்-ஏப்ரல் லாக்-டவுன் காலத்தில் மராத்வாதா விவசாயிகள் 109 பேர் தற்கொலை-மாநில அரசு தகவல்

மகாராஷ்ட்ரா மாநிலம் மராத்வாதா பகுதியில் சராசரியாக தினசரி 2 விவசாயிகள் தற்கொலை செய்து மரணிப்பதாகவும் இதில் மார்ச்-ஏப்ரல் லாக்டவுன் காலக்கட்டத்தில் மட்டும் 109 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்திருப்பதாகவும் அவுரங்காபாத் டிவிஷினல் கமிஷனர் அலுவலகம் மகாராஷ்டிர மாநில அரசுக்கு அளித்த தகவலில் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் வரை 4 மாதக் காலக்கட்டத்தில் 231 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இந்த தரவு அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. இதில் மார்ச்சில் 73 விவசாயிகளும் ஏப்ரலில் 36 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர்.

இந்தியா மார்ச் 25ம் தேதி முதல் லாக்-டவுனில் உள்ளது, தற்போது லாக்டவுன் 4.0 நடைபெற்று வருகிறது.

இந்தப் பகுதியில் 8 மாவட்டங்களிலும் விவசாயிகள் தற்கொலை பதிவாகியுள்ளது. இங்கு மக்கள் தொகை 1.87 கோடியாகும்.

‘தற்கொலை எண்ணிக்கை அதிகரிக்கும்’

மகாராஷ்ட்ரா விவசாயிகள் சங்க தலைமை அமைப்பான ஷெட்காரி சங்கட்னா தலைவர் அனில் கன்வட் கூறும்போது, “கரோனா தொற்றினால் ஏற்படும் தாக்கம் விவசாயிகளைப் பொறுத்தவரை இன்னும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இது மேலும் அவர்களை துயரப்படுத்தவே செய்யும்.

வேளாண் விளைச்சலுக்கு சந்தை இல்லை. லாக்டவுன் காலக்கட்டத்தில் விவசாயிகள் செய்த உற்பத்தியில் 10% கூட விற்கவில்லை. இதனால் விதைவிதைக்கப் பணம் இல்லை, குடும்பத்தை நடத்துவதற்கான பணம் இல்லை” என்கிறார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு மகாராஷ்ட்ரா மாநில அரசு அளித்த தகவலின் படி ஜனவரி 2011 முதல் டிசம்பர் 2014 வரை 6,268 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 2015-2018 காலக்கட்டத்தில் இரட்டிப்புக்குக் கொஞ்சம் குறைவாக 11,995 தற்கொலைகளாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x