

உத்தரபிரதேச மாநில அரசுக்கு கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி எழுதிய கடிதத்தில், "உ.பி.,யில் சிக்கித் தவிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல 1,000 சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்துள்ளோம்.
காசியாபாத்தில் உள்ள காசிப்பூர் எல்லையிலிருந்து 500 பஸ்களையும், நொய்டா எல்லையிலிருந்து 500 பஸ்களையும் இயக்க விரும்புகிறோம். இதற்கான முழு செலவையும் காங்கிரஸ் கட்சி ஏற்கும். இதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
இக்கடிதத்தை பரிசீலித்த உ.பி. அரசு, பிரியங்காவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப 1,000 பஸ்களை இயக்க அனுமதி அளிப்பதாக பிரியங்காவுக்கு உ.பி.மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவினாஷ் அவஸ்தி நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இயக்கப்பட உள்ள பஸ்கள், ஓட்டுநர்கள் குறித்த விவரங்களை உடனடியாக அளிக்குமாறு பிரியங்காவை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.