

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அனைத்து மாநில அரசுகளுக்கும் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொருளாதார சரிவு ஒருபுறம் இருந்தாலும், சுற்றுச்சூழல் மாசுபாடு பன்மடங்கு குறைந்துள்ளதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், ஆற்றில் கலக்காததால் தூய்மையான குடிநீர் கிடைக்கிறது. வாகனங்கள் பெருமளவு இயங்காததால் காற்றுமாசு பெரிய அளவில் குறைந்துள்ளது. ஒலி மாசும் கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, சுற்றுச்சூழலின் ஏராளமான நன்மைகளை நாம் அனுபவித்து வருகிறோம்.
ஒருவேளை, எதிர்காலத்தில் ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டாலும் இந்த சுற்றுச்சூழல் மேம்பாட்டை நாம் தக்கவைக்க வேண்டும். இதற்கு, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் சுற்றுச்சூழல் விதிகளைகண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும். அதேபோல, சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.