

கரோனா வைரஸ் நிவாரணம் என்று அறிவிக்கப்பட்ட பொருளாதார நிவாரண அறிவிப்பில் மத்திய அரசு அனைத்துத் துறைகளையும் தனியாருக்குத் திறந்து விட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதே போல் கோவிட்-19 நெருக்கடி காரணமாக மாநிலங்கள் கோரிய உள்நாட்டு மொத்த உற்பத்தியில் மாநிலங்கள் கடன் வாங்கும் அளவை 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரித்துள்ளது மத்திய அரசு. ஆனால் இதற்காக நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அதாவது சில குறிப்பிட்ட சீர்த்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.
கடன்களுக்குத் தேவையில்லாமல் கடுமையான நிபந்தனைகளை விதிப்பது மாநில அரசுகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளதும் கவனிக்கத்தக்கது.
ஆத்மனிர்பார் பாரத் அபியான் நிவாரண அறிவிப்பில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக கூடுதல் ரூ.40,000 கோடி ஒதுக்கியுள்ளது. தொழிற்துறை ஒவ்வொன்றிலும் தனியார்மயத்தை வரவேற்றுள்ளது, பாதுகாப்பு உள்ளிட்ட உத்திசார் துறைகளுக்கு மட்டும் பொதுத்துறையை வைத்துக் கொண்டுள்ளது. கார்ப்பரேட் செக்டார்களுக்கும் நிறுவனச்சட்டம், திவால் சட்டத்தில் சிறு மாற்றங்களைக் கொண்டு வந்து அவர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.
மத்திய அரசு கணக்கீட்டின் படி மொத்த நிவாரண பேக்கேஜ் மதிப்பு 21 லட்சம் கோடி.
இந்த ஒட்டுமொத்த பேக்கேஜ் குறித்து எர்ன்ஸ்ட் அண்ட் யங் தலைமை கொள்கை வகுப்பாளர் டி.கே.ஸ்ரீவஸ்தவா கூறும்போது, “இறுதி நிலவரத்தின் படி மத்திய அரசின் பொருளாதார நிவாரண செப்பம் மொத்தமாக ரூ.20.97 லட்சம் கோடியாகும். இது ஜிடிபியில் 9.8% ஆகும். இதில் மத்திய அரசின் பட்ஜெட் ஒதுக்கீட்டுடன் கூடுதலாக 2.2 லட்சம் கோடிதான் அரசுக்கு நேரடி செலவு. 1.55 லட்சம் கோடி ஏற்கெனவே உள்ள பட்ஜெட் செலவினங்களுடன் தொடர்புடையது.
மீதி 85% ஆர்பிஐ-யின் நிதி அறிவிப்புகளையும், கடன் உத்தரவாதத் திட்ட்டங்களையும், இன்சூரன்ஸ் திட்டங்களையும் தொடர்பு படுத்துவதாகும். மற்றபடி அமைப்புசார் சீர்த்திருத்தங்கள்தானே தவிர நிவாரண நடைமுறைகள் என்று கூற முடியாது” என்றார் திட்டவட்டமாக.
மாநிலங்களுக்கு கடன் 3% முதல் 5% வரை அதிகரிக்கப்பட்டிருந்தாலும் அது சில சீர்த்திருத்த நிபந்தனைகளை உள்ளடக்கியதாகும். ஒருநாடு ஒரு ரேஷன் திட்டம், வர்த்தகம் செய்ய சூழ்நிலையை எளிதாக்குவது, மின்சார விநியோகம், நகராட்சி உள்ளிட்டவை இதில் அடங்கும்.