கர்நாடகாவில் மே 19 வரை ஊரடங்கு நீட்டிப்பு

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா.
கர்நாடகா முதல்வர் எடியூரப்பா.
Updated on
1 min read

மூன்றாவது ஊரடங்கு இன்று முடிவடையும் தருவாயில் மேலும் 2 நாள் நீட்டித்து கர்நாடக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு முதல் கட்டமாக மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை விதிக்கப்பட்டது. பின்னர் இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3 வரையும், மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரையும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் இரு நாட்களுக்கு அதாவது மே 19 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, மே 17க்குப் பிறகு உள்ளூர் சுற்றுலா நோக்கங்களுக்காக ஜிம், உடற்பயிற்சி மையங்கள் மற்றும் கோல்ஃப் மைதானங்கள், சில ஹோட்டல்களையும் திறக்க அனுமதிக்க வாய்ப்புள்ளது என்று கர்நாடக அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

தற்போதுள்ள மூன்றாவது கட்ட ஊரடங்கு முடிவுக்கு வந்ததும், மே 17 க்குப் பிறகு பல விஷயங்களுக்கு தளர்வு அறிவிக்க வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்த முதல்வர் எடியூரப்பா, அதற்கு முன் மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்காக மாநில அரசு காத்திருக்கும் என்று கூறியிருந்தார்.

அண்மையில் பிரதமர் மோடியின் காணொலிக் காட்சி உரையாடலின் போது, ​​பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

அதில் கலந்துகொண்டு கர்நாடகா முதல்வர் ​​எடியூரப்பா பேசுகையில், ''மாவட்ட வாரியான வண்ணக் குறியீட்டை நீக்க வேண்டும். அதற்குப் பதிலாக தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு மண்டலங்களை கடுமையாகச் சுற்றி வளைக்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளையும் மீண்டும் தொடங்க வேண்டும்.

அதே நேரத்தில் மால்கள், சினிமா அரங்குகள், உணவு வசதிகள் மற்றும் மையக் கட்டுப்பாட்டு ஏ.சி. பொருத்தப்பட்ட நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தொடரவேண்டும். கரோனா பாதித்த இடங்களைச் சுற்றி 50 முதல் 100 மீட்டர் வரை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவித்துவிட்டு மீதியுள்ள இடங்களில் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட வணிக நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட வேண்டும்'' என்று பரிந்துரைத்தார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மே 19 நள்ளிரவு தற்போதுள்ள மூன்றாவது ஊரடங்கு தொடரும்'' என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in