Last Updated : 17 May, 2020 04:38 PM

 

Published : 17 May 2020 04:38 PM
Last Updated : 17 May 2020 04:38 PM

தனிமைப்படுத்தும் விதியை ஏற்கும் பயணி மட்டுமே சிறப்பு ரயிலில் பயணிக்க அனுமதி: ஐஆர்சிடிசி அதிரடி அறிவிப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி

சிறப்பு ரயிலில் பயணிக்கும் பயணிக்கு கரோனா வைரஸ் அறிகுறிதள் ஏதேனும் இருந்தால் அவர்கள் தாங்கள் சென்று சேரும் இடத்தில் தனிமைப்படுத்தும் முகாமுக்குச் செல்ல ஒப்புக்கொண்டால் மட்டுமே ரயலில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று ஐஆர்சிடிசி அதிரடியாக அறிவித்துள்ளது.

கடந்த வாரம் பெங்களூருவில், சிறப்பு ரயிலில் வந்த 50 பேரைத் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தும்போது அவர்கள் மறுத்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தைக் கருத்தில்கொண்டு ஐஆர்சிடிசி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஒருவர் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, “நான் சென்றடையும் இடத்தில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளைப் படித்தேன். நான் அந்த விதிமுறைகளுக்கு உடன்படுகிறேன். இதற்கு ஒப்புக்கொண்டு டிக்கெட்டை முன்பதிவு செய்கிறேன்” என்று பெட்டிச்செய்தியாக தரப்பட்டுள்ளது.இதில் ஆம் என்று ஒப்புக்கொண்டால்தான் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் வகையில் புதிய விதி உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐஆர்சிடிசி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “டிக்கெட் முன்பதிவுசெய்யும் முன் பாப்-அப் மெசேஜ் ஒன்று வரும் அதில், சென்றடையும் இடத்தில் உள்ள சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு டிக்கெட் முன்பதிவு செய்கிறேன் என்று ஆங்கிலம், இந்தியில் தரப்பட்டுள்ளது. பயணி ஒருவர் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இதை ஒப்புக்கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்யவேண்டும். இல்லாவிட்டால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் கட்டுப்பாடுகள் இருப்பதால் இந்த விதிமுறைக்கு பயணிகள் உடன்பட்டு தனிமைக்குச் சென்றால்தான் அவர்களுக்கு டிக்கெட் கிடைக்கும். இல்லாவிட்டால் டிக்கெட் பெற முடியாது. அதேபோல பயணிகள் அனைவரும் தங்கள் மொபைல் போனில் ஆரோக்கிய சேது செயலியையும் பதிவிறக்கம் செய்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமூக விலகலைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதலும் கட்டாயமாகும்” எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x