

பிஹாருக்கு இதுவரை வந்துள்ள 10,385 புலம்பெயர்ந்த தொழிலாளர்களில், 560 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
பிஹாருக்கு நாள்தோறும் ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வந்து சேர்ந்த வண்ணம் உள்ளனர். அப்படி திரும்பி வரும் அனைத்து புலம்பெயர்ந்த தொழிலார்களும் கொடிய வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்ட வசதியின் கீழ் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
புலம்பெயர்ந்தோரின் வருகை மற்றும் தேதியை தொடர்ச்சியாக பகுப்பாய்வு செய்து வருவதில் பிஹார் சுகாதாரத் துறை மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. பிஹாருக்கு இதுவரை மொத்தம் 10,385 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வந்து சேர்ந்துள்ளனர். கொடிய வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட வசதியின்கீழ் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அனைவரது முடிவுகளும் வந்துள்ள நிலையில் அதில் 560 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாநிலத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை 1179 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள 560 பேரில் டெல்லியிலிருந்து 172 புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் மகாராஷ்டிராவிலிருந்து 123 பேரும், மேற்கு வங்காளத்திலிருந்து 26 பேரும் வந்தவர்கள் ஆவர். கரோனா வைரஸ் நோயாளிகள் தற்போது சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.