Last Updated : 17 May, 2020 03:39 PM

 

Published : 17 May 2020 03:39 PM
Last Updated : 17 May 2020 03:39 PM

கூடுதலாக ரூ.4.லட்சம் கோடி பெறலாம்; மாநிலங்களின் கடன் பெறும் அளவு 5 சதவீதமாக உயர்த்தப்படுகிறது: மத்திய அரசு அறிவிப்பு

மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று, நடப்பு நிதியாண்டில் மாநிலங்களின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் கடன் வாங்கும் அளவு 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரித்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் மாநில அரசுகள் அதிகபட்சமாக கூடுதலாக ரூ.4.28 லட்சம் கோடி கடன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சுயசார்பு பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார். சுயசார்பு பொருளாதாரத்துக்காக இதுவரை ஐந்து கட்டங்களாகத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியுடனான ஆலோசனையின்போது மாநில முதல்வர்கள், மாநிலங்களின் கடன் பெறும் அளவை அதிகப்படுத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர். அதன்பின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 5-வது கட்ட அறிவிப்புகளை அறிவிக்கையில் மாநில அரசுகளுக்கான கடன் பெறும் அளவை அதிகரித்து அறிவித்தார்.

அதன் விவரம்:

''நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகள் உள்நாட்டுமொத்த உற்பத்தியில் கடன் வாங்கும் அளவு 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதன்படி மாநிலங்கள் கடன் பெறுவதற்கான உச்சவரம்பு உயர்த்தப்படுவதன் மூலம் ரூ.4.28 லட்சம் கோடி கூடுதல் கடனாக மாநிலங்களுக்குக் கிடைக்கும். மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் மாநிலங்களுக்கான கடன் பெறும் உச்சவரம்பு படிப்படியாக உயர்த்தப்படும்.

மாநிலங்களை போலவே மத்திய அரசும் பெரிய அளவில் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. இருப்பினும், உதவி தேவைப்படும் இந்த நேரத்தில், மாநில அரசுக்கான ஆதரவை மத்திய அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு ரூ 46,038 கோடி ஏப்ரலில் முழுமையாக வழங்கப்பட்டது. வருவாய் பற்றாக்குறை மானியங்களாக மாநில அரசுகளுக்கு ஏப்ரல் , மே மாதத்தில் ரூ.12, 390 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியை முன்கூட்டியை ரூ.11,092 கோடி ஏப்ரல் முதல் வாரத்திலேயே கரோனா வைரஸுக்கு எதிரான பணிகளைத் தொடர விடுவிக்கப்பட்டது. இது தவிர சுகாதாரத்துறை சார்பில் ரூ.4,113 கோடியும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று ரிசர்வ் வங்கி, மாநிலங்கள் அரசு ஓவர் டிராப்ட் மூலம் கடன் பெறும் நாட்களை 14 லிருந்து 21 நாட்களாக உயர்த்தியுள்ளது. நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகள் மாநில உள்நாட்டு உற்பத்தியின் மூலம் அதிகபட்சமாக ரூ.6.14 லட்சம் கோடி கடன் பெற முடியும். மாநிலங்கள் தங்கள் கடன் பெறும் தகுதியில் இதுவரை வெறும் 14 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. மீதமுள்ள 86 சதவீதத்தைப் பயன்படுத்தவில்லை. மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்றுக் கடன் பெறும் சதவீதமும் 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது''.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x