

ஊரடங்கை அமல்படுத்துவதில் காவல்துறை கடுமையாக மேற்கொண்ட நடவடிக்கைகளே அந்தமான் நிகோபார் தீவுகளில் கரோனா பரவாததற்கு முக்கியக் காரணம் என்று யூனியன் பிரதேசே டிஜிபி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சில மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பூஜ்ஜிய நிலையில் இருப்பது ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது.
இதுகுறித்து அந்தமான் நிகோபார் காவல்துறைத் தலைவர் தேபேந்திர பதக் பிடிஐயிடம் கூறியதாவது:
''ஊரடங்குக் கட்டுப்பாடுகளை கடுமையாக விதிக்க காவல்துறை எடுத்துக்கொண்ட கடும் முயற்சிகளே அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் கரோனா வைரஸ் பரவாமல் உள்ளது.
அந்தமான் நிகோபார் காவல்துறைத் தலைவர் தேபேந்திர பதக்
கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட 33 பேரும் குணமடைந்து ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவமனைகளில் இருந்து தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதன் பின்னர் தீவுகளில் எந்தவிதமான புதிய தொற்றும் பதிவாகவில்லை.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் 572 தீவுகளைக் கொண்ட ஒரு யூனியன் பிரதேசமாகும். மார்ச் 24 அன்று டெல்லியின் நிஜாமுதீன் தப்லீக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற 9 பேர் இங்கு திரும்பியபோது தீவுகளில் கரோனா வைரஸ் பரவியது. தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர் விமான நிலையத்திலிருந்து விரைவாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மீதமுள்ள ஏழு பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த நபர்களை விசாரித்தபோதுதான், மார்ச் நடுப்பகுதியில் சந்தித்த தப்லீக் ஜமாத்தின் விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. அதன்படி நாங்கள் அதை டெல்லிக்குத் தெரிவித்தோம். ஆனால் அடுத்தகட்டமாக, சென்னையிலிருந்து வந்தவர்களால் கரோனா பரவியது. துரதிர்ஷ்டவசமாக சென்னைக்குச் சென்று திரும்பிய இருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த இரண்டு நபர்களிடமிருந்து 24 பேருக்கு தொற்று பரவியது. ஒரு வாரத்திற்கு முன்பு கரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்தது. இதுவே அனைத்துத் தீவுகளிலும் எங்களைக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கக் கட்டாயப்படுத்தியது.
இந்த நடவடிக்கையின் கீழ், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளை காவல்துறை கண்டிப்பாக அமல்படுத்தியது. காவல்துறையினர் மேற்கொண்ட கடும் நடவடிக்கைகளின் விளைவாக மே 15-ம் தேதி வரை ஊரடங்கு விதிகளை மீறிய 190 பேர் கைது செய்யப்பட்டனர். 200 வழக்குகளைப் பதிவு செய்தனர். அபராதம் மூலம் ரூ.30 லட்சம் வசூலிக்கப்பட்டது.
மக்கள் வசிக்கும் அனைத்துத் தீவுகளிலும் காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர். ஊரடங்கு விதிமுறைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்தியது. மீறுபவர்கள் மீது கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டன.
தீவுக்குள் கோவிட்-19 நுழைவதற்கான இன்னொரு வாய்ப்பான, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மியான்மருடன் எல்லைகளைக் கொண்ட தீவுகளில் எந்தவொரு ஊடுருவல் முயற்சியையும் முறியடிக்க அந்தமான் மற்றும் நிகோபார் காவல்துறையினர் உன்னிப்பாகக் கண்காணித்தனர்.
மார்ச் 21 முதல் தீவுகளுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மார்ச் 16 முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு கதவு மூடப்பட்டது. காவல்துறையினர் மேற்கொண்ட இவை அத்தனை நடவடிக்கைகளிலும் சற்று கடுமையாக நடந்துகொண்டிருந்தாலும் அது அந்தமான் நிகோபார் தீவுகளில் கரோனா வைரஸ் பரவாமால் பூஜ்ஜியமாக்க உதவியது''.
இவ்வாறு தேபேந்திர பதக் தெரிவித்தார்.