சாலைஓரத்தில் அமர்ந்து புலம்பெயர் தொழிலாளர்களின் குறைகேட்ட ராகுல் காந்தி: 10 காரில் சொந்த ஊர் அனுப்பி நடவடிக்கை

புலம்பெயர் தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ராகுல் காந்தி : படம் ஏஎன்ஐ
புலம்பெயர் தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ராகுல் காந்தி : படம் ஏஎன்ஐ
Updated on
2 min read

கரோனா வைரஸால் உருவான லாக்டவுனால் சொந்த ஊருக்கு சென்ற புலம்பெயர் தொழிலாளார்களை டெல்லியில் உள்ள சுக்தேவ் விஹார் பகுதியில் நேற்று சந்தித்த ராகுல் காந்தி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப 10 வாகனங்களை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்தது

கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் கடந்த மார்ச் 25-ம் ேததி லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இந்த லாக்டவுனால் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், வேலையிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சொந்த மாநிலம், ஊர்களுக்கு செல்லத் தொடங்கினர். ஆனால் கடந்த ஒரு மாதகாலமாக நடந்து செல்ல தடைவிதித்திருந்த மத்திய அரசு தற்போது ஷ்ராமிக் ரயில்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வருகிறது.

இருப்பினும் கையில் பணமில்லாத தொழிலாளர்கள் சாலையில் நடந்தும், ரயில்வே இருப்புப்பாதையில் நடந்து சென்று சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச்செல்ல தேவையான பேருந்து வசதிகளையும் நிதியுதவியையும் வழங்க ராகுல் காந்தி மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகிறார்

இந்நிலையில் புலம்பெயர்தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் உள்ள சுக்தேவ் விஹார் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். காரில் சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இதைப்பார்த்து, காரை நிறுத்தி அவர்களைச் சந்தித்தார். சாலை ஓரத்தில் இருந்த நடைபாதையில் அமர்ந்த ராகுல் காந்தி, புலம்பெயர் தொழிலாளர்களுடன் ஒருமணிநேரத்துக்கும் மேலாக உரையாடி அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்

மேலும் அவர்களிடம் சொந்த ஊருக்குச் செல்ல தேவையான உதவிகளைச் செய்வதாக ராகுல் காந்தி உறுதியளித்தார். இந்த தொழிலாளர்ள் அனைவரும் அம்பாலா பகுதியில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் இப்போது வேலையில்லாததால், தங்கள் சொந்த ஊரான ஜான்ஸிக்கு சென்று கொண்டிருந்தனர்.

இதில் மத்தியப் பிரதேச்தைச் சேர்ந்த தொழிலாளர் மகேஷ் குமார் நிருபர்களிடம் கூறுகையில் “ கரோனா லாக்டவுனால் வேலையிழந்துவி்ட்டேன். எனது குடும்பத்தினர் 14 பேருடன் சொந்த ஊருக்கு நடந்தே சென்றபோது ராகுல் காந்தி எங்களைச் சந்தித்துப் பேசினார். எங்களிடம் குறைகளைக் கேட்டார், உதவிகள் செய்வதாகக் கூறினார். அவரிடம் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் தொழிலாளர்கள் சொந்தஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட காட்சி
காங்கிரஸ் கட்சி சார்பில் தொழிலாளர்கள் சொந்தஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட காட்சி

ராகுல் காந்தியின் இந்த சந்திப்புக் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ புலம்பெயர் தொழிலாளர்கள் நம் சொந்த மக்கள். அவர்களுடன் அமர்ந்து பேசுங்கள். அவர்களின் குறைகளைக் கேட்டு பகிர்ந்து கொள்ளுங்கள், தேசத்தை கட்டமைக்கும் அந்த தொழிலாளர்களை இந்த இக்கட்டான நேரத்தில் தனிமையில் விடக்கூடாது. ராகுல் காந்திக்கு நன்றி” எனத் தெரிவித்தார்

இதுகுறித்து டெல்லி காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில் “ டெல்லி சுக்தேவ் விஹார் பகுதியில் நடந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களை ராகுல் காந்தி சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார், அவர்கள் சொந்த ஊர்களுக்குசெல்ல வாகன ஏற்பாடும் செய்ய உத்தரவிட்டார். அதன்படி புலம்பெயர் தொழிலாளர்கள் ஜான்ஸி நகருக்குச் செல்லத் தேவையான 10 கார்களை ஏற்பாடு செய்து சமூக விலகலைப்பின்பற்றி அனுப்பி வைத்தோம்” எனத் தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in