

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனில் பாதிக்கப்பட்ட ஏழை, புலம்பெயர்ந்த மக்களுக்காக நேரடியாக பணத்தை பல்வேறு வழிகளில் மத்திய அரசு செலுத்தி வருகிறது, ஆதலால் பொருளாதாரத்தில் வரும் புயலை சமாளிக்க பிரதமர் மோடிக்குத் தெரியும் என்று காங்கிரஸ்எம்.பி. ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காணொலி மூலம் ஊடகங்களுக்குப் நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில் “மத்திய அரசு வட்டிக்குக் கடன் கொடுப்பவர் போல் நடந்து கொள்ளாமல் ஏழைகளுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் நேரடியாக கைகளில் பணத்தை வழங்கிட வேண்டும். அதிலும் ஏழை மக்கள் செலவு செய்யும் வகையில் பணத்தை நேரடியாக வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
ஏழைகளுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் நேரடியாக பணத்தை மத்திய அரசு வழங்காதவரை பொருளாதாரச் சக்கரம் சுழலாது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இப்போதே மத்திய அரசு உதவி செய்ய வேண்டும், காலம் தாழ்த்தக்கூடாது. காலம் தாழ்த்தினால், மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணத்தைச் செலுத்தாவிட்டால் பேரழிவான பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
பொருளாதாரத்தில் மிகப்பெரிய புயல் உருவாகி வருகிறது. அந்தப் புயல் தீவிரமடையும் போது, பெரும் சேதங்களை ஏற்படுத்தும், ஏராளமானோர் பாதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கிறேன்”எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பாஜகவின் செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவி்த்துள்ளார். ட்விட்டரில் அவர் பதிவி்ட்ட கருத்தில், “ கடற்கரையில் கலங்கரை விளக்கத்தின் அருகே நின்று கொண்டு எளிதாக புயலைக் கணித்து விடலாம். ஆனால், அந்தப் புயலைச் சந்திப்பது என்பது வித்தியாசமானது.
பிரதமர்மோடிக்கு அந்த புயலைச்சந்திக்கும் தகுதி இருக்கிறது, அதை எப்படி கடந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதும் தெரியும். காங்கிரஸ் தலமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தவறான ஆட்சியால் கடந்த 2014-ம் ஆண்டில் சுனாமி போன்று வந்த ஊழல்கள், வலுவிழந்த கொள்கைகள் ஆகியவற்றை எளிதாக எதிர்கொண்டு நாட்டை சீர்படுத்தி வழிநடத்திவருபவர் பிரதமர் மோடி. ஆதலால் ராகுல் காந்தி சற்று ஓய்வெடுக்கலாம்.
காங்கிரஸ் கட்சி கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து செய்ய முடியாத நல்ல விஷயங்களை பாஜக ஆட்சிக்கு வந்த 6 ஆண்டுகளில் செய்துள்ளது. ஆதார், ஜன் தன் ஆதார், ஆகியவற்றை எதி்ர்த்தவர்கள் அதற்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட காலத்தில் கோடிக்கணக்கான ஏழைகள்,விவசாயிகளுக்கு பல்வேறு வழிகள்மூலம் நேரடியாக பணத்தை மத்திய அரசு செலுத்தி வருகிறது
இந்த உதவி மட்டுமின்றி பொருளாதாரத்தை மேம்படுத்தவும், ஏழைகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் திட்டங்களைஅறிவித்துவருகிறது மத்திய அரசு “ எனத் தெரிவித்தார்