Last Updated : 16 May, 2020 07:37 PM

 

Published : 16 May 2020 07:37 PM
Last Updated : 16 May 2020 07:37 PM

உ.பி. விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் பலி; பொறுப்பற்ற அலட்சியமான ஊரடங்கே காரணம்: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

உ.பி.யில் அதிகாலை நடந்த விபத்தில் 24 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி.

கொல்கத்தா

புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் பலியானதற்கு மத்திய அரசின் பொறுப்பற்ற அலட்சியமான ஊரடங்கே காரணம் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 24 பேர் இறந்ததற்கு பாஜக அரசை திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதற்கு மத்திய அரசு அலட்சியமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கே ஒரு காரணம். இது மிகவும் ஆணவமான ஓர் அணுகுமுறை என்று திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஒரய்யா மாவட்டத்தில் இன்று அதிகாலை புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லாரியும், மற்றொரு லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவது தொடர்பாக தொடர்ந்து ஏற்பட்டு வரும் துயரங்களின் தொடர்ச்சியாகவெ இன்றைய விபத்துச் சம்பவம் பார்க்கப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு மார்ச் 25-ம் தேதி அன்று தொடங்கப்பட்டது. இதன் காரணமாக பலரும் வேலை இழந்தனர். நாடு முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு கால்நடையாக, மிதிவண்டிகளில் அல்லது லாரிகளில் நீண்ட மற்றும் கடினமான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த விபத்துகளில் பலர் பலியாகினர்.

இதுகுறித்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.சவுகதா ராய் கூறியதாவது:

''புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதை மத்திய அரசு உறுதி செய்திருக்க வேண்டும், மாறாக, மாநில அரசுகளைக் குறை கூறுவதில் மும்முரமாக உள்ளது.

ஊரடங்கை அறிவிப்பதற்கான மத்திய அரசின் திடீர் முடிவு இதுபோன்ற குழப்பத்திற்கு வழிவகுத்தது. இன்று காலை சாலை விபத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 24 பேர் பலியான சம்பவத்திற்கு மத்திய அரசின் ஆணவமான அணுகுமுறையே காரணம் ஆகும். பொறுப்பற்ற அலட்சியமான ஊரடங்கே இதற்குக் காரணம்.

ஒவ்வொரு நாளும் இதுபோல புலம்பெயர்ந்தோர் விபத்துகளில் பலியாவது அல்லது தற்கொலை செய்துகொள்வது பற்றிய தகவல்கள் வந்துகொண்டே உள்ளன.

திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான மேற்கு வங்கத்தின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் திரும்ப அழைத்து வருவதில் மத்திய அரசு போதுமான ஆர்வம் காட்டவில்லை. நாட்டில் புலம்பெயர்ந்தோர் நெருக்கடிக்கு மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வை இல்லாதது ஒரு முக்கியக் காரணம் ஆகும்''.

இவ்வாறு சவுகதா ராய் தெரிவித்துள்ளார்.

கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி ஒரு ட்வீட்டில், "புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான அவநம்பிக்கையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மில்லியன் கணக்கான மக்களின் இருப்பு மற்றும் துன்பத்தை அறிந்து கொள்வதில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x