Published : 27 Aug 2015 06:41 PM
Last Updated : 27 Aug 2015 06:41 PM

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி டி-6 ராக்கெட்

தகவல் தொடர்புக்கு உதவும் ஜிசாட்-6 செயற்கைக் கோளுடன் ஜிஎஸ்எல்வி-டி-6 ராக்கெட் வியாழன் மாலை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து மாலை சரியாக 4.52 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ஜிசாட்-6 செயற்கைக் கோளை குறிப்பிட்ட சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்.

அமெரிக்கா உட்பட உலகின் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆய்வு தொழில்நுட்பத்தில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. பிஎஸ்எல்வி, ஜிஎஸ் எல்வி ரக ராக்கெட்டுகள் மூலமாக இஸ்ரோ பல்வேறு செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது.

அந்த வரிசையில், தற்போது, தகவல் தொடர்புக்கு உதவும் ஜிசாட்-6 செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி டி-6 ராக் கெட் மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது இஸ்ரோ.

முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் மூலமாக ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவது இது 3-வது முறை ஆகும். 49 மீட்டர் உயரம் கொண்ட ஜிஎஸ்எல்வி டி-6 ராக்கெட்டின் மொத்த எடை 416 டன் ஆகும். அது விண்ணில் செலுத்த இருக்கிற ஜிசாட்-6 செயற்கைக்கோளின் மொத்த எடை 2,117 கிலோ ஆகும். இதில், எரிபொருள் எடை மட்டும் 1,132 கிலோ. எஞ்சிய 985 கிலோ கருவிகளின் எடை ஆகும்.

ஜிசாட்-6 செயற்கைக் கோளில் எஸ்-பேண்ட் தொலைத் தொடர்புக்கு உதவும் ஆண்டெனா பொருத்தப்பட்டுள்ளது. 6 மீட்டர் விட்டம் கொண்ட இந்த ஆண்டெனா, இஸ்ரோ இதுவரை தயாரித்தவற்றில் மிகப்பெரியது ஆகும்.

ஜிசாட்-6 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட 18 நிமிடங்களில் பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர், அதிகபட்சம் 35,975 கிலோ மீட்டர் தூரம் கொண்ட தற்காலிக சுற்றுப்பாதையில் விடப்படும். அதன்பிறகு அந்த செயற்கைக்கோளில் உள்ள திரவ எரிபொருள் மோட்டார் இயக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் செயற்கைக் கோள் படிப்படியாக நிலைநிறுத்தப் படும் நடைமுறை கொண்டது. இது தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

ஜியோசிங்க்ரானஸ் சாட்டிலைட் லான்ச் வெஹிகிள் (ஜி.எஸ்.எல்.வி.) ஏப்ரல் 2001-ல் முதன் முதலாக செலுத்தப்பட்டது. கடைசியாக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-2 வகை ராக்கெட் 2014 ஜனவரியில் உயரே செலுத்தி சோதிக்கப்பட்டபோது வெற்றி கண்டது. அது சுமார் இரண்டு டன் எடை கொண்ட ஜிசாட்-14 செயற்கைக்கோளை 36 ஆயிரம் கி.மீ. உயரத்தில் செலுத்தியது.

இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியினால் ஜி.எஸ்.எல்.வி டி-6 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது 9 முதல் 12 ஆண்டுகள் வரை சேவை வழங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை மணி 4.52 அளவில் ஜி.எஸ்.எல்.வி டி-6 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டரில், “நமது விஞ்ஞானிகளின் திறமைக்கும், கடின உழைப்புக்கும் கிடைத்துள்ள வெற்றி இது. வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x