Last Updated : 16 May, 2020 06:13 PM

 

Published : 16 May 2020 06:13 PM
Last Updated : 16 May 2020 06:13 PM

கடவுளின் அருளால்  கரோனா வைரஸ் இல்லை; பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் வைரஸுடன் நுழைந்தால் அதுதான் அச்சுறுத்தல்: நாகாலாந்து 

கடவுளின் அருளால் கரோனா வைரஸ் எங்கள் மாநிலத்தில் இல்லை. ஆனால் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் வைரஸுடன் நுழைந்தால் அதுதான் அச்சுறுத்தலாக இருக்கும் என்று நாகாலாந்து அரசு தெரிவித்துள்ளது.

அப்படியே கரோனா பாதிப்புகள் உருவானாலும் அதைக் கட்டுப்படுத்த எங்களிடம் சுகாதாரக் கட்டமைப்பும் இல்லை என்று நாகாலாந்து மாநில அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது வடகிழக்கு மாநிலங்களில் கரோனா பாதிப்பு பெருமளவில் இல்லை என்பதுதான் நிஜம். அதிலும் மற்ற வடகிழக்கு மாநிலங்களை ஒப்பிடும்போது நாகாலாந்து மாநிலத்தில் இன்றைய தேதியில் முற்றிலுமாக இல்லை என்பது ஓர் ஆறுதலான செய்தியாகும்.
'நாகாலாந்தில் கரோனா வைரஸ் பாதிப்புகள் இல்லை' என்ற செய்தி, மகிழ்ச்சியானது என்றாலும் பாதிப்பு ஏற்பட்டால் அதைச் சமாளிக்க இது போதுமான சுகாதார உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை என்ற கவலையும் அதிகரிக்கத்தான் செய்கிறது.

20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நாகாலாந்து மாநிலத்தில் ஒரு மருத்துவக் கல்லூரிகூட இல்லை. ஆனால், உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களுக்குப் பிறகு கோஹிமாவில் கோவிட்-19க்காக தனி சோதனை ஆய்வகம் ஒன்றை மாநில அரசு அமைத்தது. ஆனால், அத்தியாவசிய சாதனங்கள் போதுமான அளவுக்கு கிடைக்காததால் அதையும் செயல்படுத்த முடியாத நிலைதான் அங்கு உள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் டெம்ஜென் டாய் பி.டி.ஐ.யிடம் கூறியதாவது:

''கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து நாகாலாந்தை இன்றுவரை பாதுகாப்பாக வைத்திருப்பது கடவுளின் அற்புதச் செயல்தான். சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கையாள்வதில் சுகாதார ஊழியர்களின் கடின உழைப்பு மற்றொரு காரணம்.

தற்போதைய சூழ்நிலைகளில் மற்றும் குறைந்த அளவிலேயான உள்கட்டமைப்பைக் கொண்டுள்ள நிலையிலேயே, கரோனா வைரஸைத் தடுக்க நாங்கள் சிறந்த பணிகளை வழங்கியுள்ளோம். இருப்பினும் குறிப்பாக சுகாதாரத் துறையில் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது.

'நாகாலாந்தில் கரோனா வைரஸ் பாதிப்புகள் இல்லை' என்ற செய்தி, மக்களின் பிரார்த்தனைகளே மாநிலத்தை தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கின்றன என்பதை அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றாலும் பாதிப்பு ஏற்பட்டால் அதைச் சமாளிக்க மாநிலம் போதுமான சுகாதார உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை என்ற கவலையும் எங்களுக்கு இருக்கிறது.

நாகாலாந்து தற்போது அசாம் மற்றும் மணிப்பூருக்கு மாதிரிகளை சோதனைக்கு அனுப்புகிறது. 910 மாதிரிகளில் 889 மாதிரிகள் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிர்மறையாக இருப்பது கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் 21 மாதிரிகளின் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்.

எங்கள் சோதனை விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. ஆனால். ஆய்வகம் அமைக்கப்பட்டால், எங்கள் சோதனை விகிதம் உயர்ந்து, மாநிலத்தின் நிலைமை குறித்த தெளிவான படத்தை எங்களுக்குக் கொடுக்கும்.

ஊரடங்கினால் நாட்டின் பிற மாநிலங்களில் சிக்கித் தவித்த மக்கள் நாகாலாந்து மாநிலத்திற்குள் வைரஸுடன் நுழைந்ததால் தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். நேற்று வரை, நாட்டின் பல்வேறு குதிகளிலிருந்து 838 பேர் மாநிலத்திற்குத் திரும்பியுள்ளனர்.

இதன் காரணமாக மாநிலத்தின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், அரசு நடத்தும் மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கும் அரசாங்கம் வேகமாகச் செயல்பட்டு வருகிறது.

11 மாவட்ட மருத்துவமனைகளும் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தயார் நிலையில் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் மொத்த படுக்கைகளின் எண்ணிக்கை 464 ஆகும். இருப்பினும், பெருமளவில் பாதிப்புகள் ஏற்பட்டால் இந்த வசதிகள் போதுமானதாக இல்லை என்பதுதான் உண்மை.

நிலைமையைத் திறம்படக் கண்காணிப்பதற்கும் அதற்கேற்ப செயல்திட்டங்களை மேற்கொள்ளவும் பிரத்யேகமான போர் கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 3,261 பேர் தங்குவதற்கான அறைகளை அரசு உருவாக்கியுள்ளது.

மாநிலத்தில் தற்போது 376 பேர் வீட்டுத் தனிமைப்படுத்தலில் உள்ளனர். 957 பேர் நிறுவனத் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர். மொத்தம் 6,849 பேர் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்துள்ளனர்''.

இவ்வாறு தலைமைச் செயலாளர் டெம்ஜென் டாய் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x