

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நாடு திரும்ப முடியாமல் சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் 56 கர்ப்பிணி செவிலியர்களை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் உலகின் பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் திரும்பமுடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் வகையில் வந்தே பாரத் மிஷன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
கடந்த 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை முதல் கட்டமாக 64 விமானங்கள் மூலம் வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியர்கள் 15 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர். இதில் 2-வது கட்டமாக வந்தே பாரத் மிஷன் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை நடக்கிறது. இந்த 2-ம் கட்டத்தில் 18 நாடுகளில் இருந்து இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
இந்த சூழலில் சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் 56 கர்ப்பிணி செவிலியர்களை மீட்க அரசுக்கு உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஐக்கிய செவிலியர் கூட்டமைப்பு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு வரும் திங்கள்கிழமை விசாரிக்கப்படுகிறது.
இந்த மனுவைத் தாக்கல் செய்த வழக்கறிஞர் சுபாஷ்சந்திரன் கூறுகையில், “மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் படி, அதைக் கண்டிப்புடன் பின்பற்றி வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் விமானம், கப்பல் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.
அந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளில் முதியோர்கள், கர்ப்பிணிகள், அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோர், குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க கூறப்பட்டுள்ளது. தற்போது சவுதி அரேபியாவில் 56 கர்ப்பிணி செவிலியர்கள் இந்தியாவுக்கு வரமுடியாமலும், மருத்துவ உதவி கிடைக்காமலும் மனச்சோர்வுடன் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியும், உளவியல் சிகிச்சையும் தேவை. சவுதி அரேபியாவில் தங்கியுள்ள இந்த செவிலியர்கள் அனைவருக்கும் குடும்ப விசா தரப்படாததால், தனிமையில் தங்கி இருக்கிறார்கள். ஆதலால், கர்ப்பிணிகளாக இருக்கும் இந்த 56 செலிவியர்களுக்கு முன்னுரிமை அளித்து மத்திய அரசு சவுதி அரேபியாவிலிருந்து மீட்டு வரக் கோரி மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வர உள்ளது” எனத் தெரிவித்தார்.