Last Updated : 16 May, 2020 03:06 PM

 

Published : 16 May 2020 03:06 PM
Last Updated : 16 May 2020 03:06 PM

கரோனா பாதிப்பில் சீனாவை முந்திய இந்தியா: இந்தியாவின் வூஹான் ஆனதா மும்பை?

உலகையே மிரட்டிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸின் வெறியாட்டம் முதலில் தொடங்கியது சீனாவில்தான். 1.12 கோடி மக்கள்தொகை கொண்ட வூஹான் நகரை அந்நாட்டு அரசு, போக்குவரத்தில் இருந்து துண்டித்து முடக்கியபோதுதான் அந்த வைரஸின் வீரியத்தை உலகமே உணர்ந்தது. அதற்குள்ளாக அனைத்து நாடுகளிலும் நோய்த் தொற்று ஏற்படத் தொடங்கி வல்லரசு நாடான அமெரிக்காவையும் நிலைகுலைய வைத்தது.

இந்த நோய்த் தாக்கத்தில் சீனாவை இந்தியா மிஞ்சக்கூடும் என்று பிப்ரவரி மாதம் யாராவது சொல்லியிருந்தால் சிரித்திருப்போம். ஆனால், இப்போது அது நிஜமாகிவிட்டது. நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நிலவரப்படி இந்தியா சீனாவை முந்தியது. அதாவது உலகில் அதிகமாக கரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் பட்டியலில் 12-வது இடத்தில் இருந்த இந்தியா, சீனாவை முந்தி 11-வது இடத்துக்கு முன்னேறியது. இன்று காலை நிலவரப்படி, பெரு நாடும் சீனாவை முந்தியிருக்கிறது. எனவே, சீனா 13-வது இடத்துக்குப் போய்விட்டது.

தற்போதைய நிலவரப்படி, உலகிலேயே அதிக தொற்றுடன் அமெரிக்கா முதலிடத்தை வகிக்கிறது. ஸ்பெயின், ரஷ்யா, இங்கிலாந்து, இத்தாலி, பிரேஸில், பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, ஈரான், இந்தியா, பெரு, சீனா, கனடா, பெல்ஜியம், சவுதி அரேபியா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தை வகிக்கின்றன. நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 20-வது இடத்திலும், இலங்கை 102-வது இடத்திலும் இருக்கின்றன.

உலகம் முழுவதும் மொத்தம் 46,29,407 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதில், 17,61,062 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டார்கள். 3,08,676 பேர் இறந்திருக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற வேர்ல்டோமீட்டர் இணையதளம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவிலேயே கரோனாவால் மிக மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட நகரம் என்ற பெயரை மும்பை பெற்றிருக்கிறது. அங்கு மட்டும் 16,738 பேர் பாதிக்கப்பட்டு, 621 பேர் இறந்திருக்கிறார்கள். இதனால் மும்பை நகரை இந்தியாவின் வூஹான் என்று ஊடகங்கள் அழைக்கத் தொடங்கியிருக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x