

உத்தரப் பிரதேசத்தின் ஒரய்யா மாவட்டத்தில் இன்று அதிகாலை புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லாரியும், மறறொரு லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். 15 பேர் படுகாயமடைந்தனர்.
லக்னோவிலிருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள ஒரய்யா அருகே மிஹாலி பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு நடந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்த விபத்தில் பலியான புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ராஜஸ்தானில் இருந்து உ.பி. வழியாக சென்ற லாரியில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயணித்தனர்.
ஒரய்யா மாவட்டம், மிஹாலி அருகே இன்று அதிகாலை 3.30 மணிக்கு வந்தபோது தொழிலாளர்கள் பயணித்த லாரியும், மற்றொரு லாரியும் மோதி விபத்துக்குள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அந்த லாரியில் பயணித்த தொழிலாளர்களில் 24 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 15 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 15 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனை மற்றும் சைபை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து அறிந்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், போலீஸார், தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து அறிந்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்
முதல்வர் அலுவலகம் விடுத்துள்ள செய்தியில், “ஒரய்யாவில் நடந்த விபத்து குறித்து முதல்வர் கேட்டறிந்தார். விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை முதல்வர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்குத் தரமான மருத்துவ சிகிச்சையும் வழங்க உத்தரவிட்டுள்ளா். கான்பூர் போலீஸ் ஐஜியை உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று விசாரிக்கவும், மீட்புப் பணிகளைச் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது.
கரோனா வைரஸால் ஏற்பட்ட லாக்டவுனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அவர்களை அனுப்ப ஷ்ராமிக் சிறப்பு ரயிலை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இருப்பினும் இந்த சிறப்பு ரயிலைப் பயன்படுத்தாமல் புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையில் நடந்து செல்வதும், ரயில்வே இருப்புப்பாதையில் நடந்து செல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது
இந்த வாரத்தின் தொடக்கத்தில் மத்தியப் பிரதேசம், பிஹார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களில் 15 பேர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர்.
கடந்த 8-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய 16 புலம்பெயர் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 16 பேர் பலியானார்கள். 9-ம் தேதி மத்தியப் பிரதேசம் நரசிங்கபூர் மாவட்டத்தில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 5 தொழிலாளர்கள் பலியானார்கள்.
கடந்த 14-ம் தேதி மகாராஷ்டிராவிலிருந்து உத்தரப் பிரதேசத்துக்கு ஒரு லாரியில் பயணித்த புலம்பெயர் தொழிலாளர்கள் விபத்தில் சிக்கினர். அந்த லாரி மற்றொரு லாரி மீது மத்தியப் பிரதேசம் குணா பகுதியி்ல் விபத்தில் சிக்கியதில் 8 பேர் பலியானார்கள், 55 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.