Last Updated : 16 May, 2020 08:06 AM

 

Published : 16 May 2020 08:06 AM
Last Updated : 16 May 2020 08:06 AM

தங்கம் திருடுவதற்காக கோலார் சுரங்கத்தில் இறங்கிய 3 பேர் உயிரிழப்பு- 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

கோலார் தங்கச்சுரங்கத்தில் இறங்கி தங்க தாதுக்களை திருட முயன்ற 3 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள தங்கவயலில் சுரங்கம் அமைத்து 100 ஆண்டுகளுக்கு மேலாக தங்கம் வெட்டிஎடுக்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த சுரங்கம் மூடப்பட்டதால், அதில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான தமிழர்கள் வேலைஇழந்தனர். சுரங்கம் மூடப்பட்டாலும், அதில் மீதம் உள்ள தங்கதாதுகளை திருடுவது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு மாரிக்குப்பம் மைசூரு மைனிங் பகுதியில் உள்ள ஆயிரம் அடி சுரங்கத்தில் 6 பேர் தங்க தாதுக்களை திருட சுரங்கத்திற்கு சென்றுள்ளனர். அவர்களில் 5 பேர் சுரங்கத்துக்குள் இறங்க ஒருவர் மட்டுமே மேலேயேஇருந்துள்ளார். சுரங்கத்துக்குள் இறங்கியவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அவர்களின் குடும்பத்தினருக்கும் ராபர்ட்சன் பேட்டை போலீஸாருக்கும் தகவல் கொடுத்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், தீயணைப்பு படையினர் மூலம் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டன‌ர். தங்க சுரங்கத்துக்குள் சுமார் 20 அடியில் 2 பேர் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 60 அடி ஆழத்தில் ஒருவர், 80 அடியில் ஆழத்தில்ஒருவர் 100 அடி ஆழத்தில் ஒருவர் என 3 பேர் பிணமாக கிடந்தனர். நீண்ட போராட்டத்துக்கு பின் அவர்களின் உடலை நேற்று மேலே கொண்டு வந்தனர்.

சுரங்கத்துக்குள் ஆக்ஸிஜன் கிடைக்காததால் அவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x