

சொந்த ஊர் திரும்ப நடந்து செல்லும் தொழிலாளர்களை தடுத்து நிறுத்தமுடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பான மனுவையும் தள்ளுபடி செய்தது.
வழக்கறிஞர் அலாக் அலோக்ஸ்ரீ வாஸ்தவா உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "கரோனாவைரஸ் பரவல் பிரச்சினை காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் சிக்கிய தொழிலாளர்கள் எதையும் பொருட்படுத்தாமல் ஊர்திரும்பினால் போதும் என செல்கிறார்கள். சாலைகளில் செல்லும் தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவு, குடிநீர், தங்கும் வசதி செய்து தருமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நேற்று தள்ளுபடி செய்த நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியிருப்பதாவது: யார் நடந்துசெல்கிறார்கள், நடந்து செல்லாதவர்கள் யார் என்பதை கண்காணிப்பது உச்ச நீதிமன்றத்துக்கு சாத்தியமற்றது. இதுபற்றி முடிவு செய்ய வேண்டியது அரசுகள்தான். இதுபற்றி விசாரிக்கவோ முடிவு எடுக்கவோ உச்ச நீதிமன்றத்துக்கு என்ன இருக்கிறது.
சொந்த ஊர் திரும்புவதற்கு ஏராளமான மக்கள் நடந்து செல்கிறார்கள். நிறுத்தவே இல்லை. ரயில் பாதை மேல் படுத்து உறங்கியபோது ரயிலில் அடிபட்டு தொழிலாளர்கள் இறந்தது பற்றியும் மனுவில் கூறப்பட்டுள்ளது. தண்டவாளத்தின் மீது படுத்து உறங்கினால் இதுபோன்ற விபத்துகளை எப்படி தடுக்க முடியும். பத்திரிகைகளில் வரும் செய்திகளை தவறாமல் படித்து, எல்லா விவகாரங்கள் பற்றியும் வழக்கறிஞர்கள் முழுமையாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். பின்னர் இந்த நீதிமன்றம் அதுபற்றி முடிவு செய்ய வேண்டும் என்று வழக்கு போடுகிறார்கள். இதைப் பற்றி முடிவு செய்ய வேண்டியது அரசுதான். இந்த நீதிமன்றம்ஏன் இதுபற்றி விசாரித்து முடிவுசெய்ய வேண்டும். இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.
உங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை தருகிறோம். அதை வைத்துஅரசு உத்தரவுகளை உங்களால் அமல்படுத்த முடியுமா என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், அந்த மனுவை தள்ளுபடிசெய்து உத்தரவிட்டது.
முன்னதாக மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும்போது, "வெளி மாநிலங்களில்பணிபுரியும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப அரசுஏற்கெனவே போக்குவரத்து வசதியை தொடங்கி உள்ளது. மாநிலங்களுடன் செய்துள்ள ஒப்பந்தப்படி எல்லோருக்கும் பயண வசதி கிடைக்கும். பொறுமை காக்காமல் நடந்து செல்வோர் மீது நடவடிக்கை எடுத்தால் எந்தப் பலனும் கிடைக்காது" என்றார்.
ஊரடங்கு காரணமாக, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தங்குவதற்கு உறைவிடம் இன்றி அல்லல்படுகின்றனர். இதனால் சொந்த ஊர்திரும்பினால் போதும், அது ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவாக இருந்தாலும் பரவாயில்லை என சுமைகளுடன் குடும்பம் குடும்பமாக செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.