Published : 16 May 2020 07:04 AM
Last Updated : 16 May 2020 07:04 AM

உடல்நலனும் மனநலனும் திடமாக இருக்க கரோனா பாதிப்புக்கு வீட்டில் சிகிச்சை அளிப்பதே சிறந்தது- குணமடைந்த மும்பை இளைஞர் யோசனை

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் செம்பூர் பகுதியில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இப்பகுதியை சேர்ந்த இளைஞர் டோனி, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்துள்ளார். வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தனது சொந்த அனுபவத்தை ஒலிநாடாவாக அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த ஏப்ரல் 10-ம் தேதி எனக்குகாய்ச்சல், தலைவலி ஏற்பட்டது. இரண்டு பாரசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. அடுத்த நாள் செம்பூர் ராஜவாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு எனதுதொண்டையில் இருந்து சளி மாதிரிஎடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து 2நாட்களுக்கு எனக்கு பாரசிட்டமால், அசிடிட்டி மாத்திரைகள் வழங்கப்பட்டன. கடந்த ஏப்ரல் 13-ம் தேதியேஎனது உடல் வெப்பநிலை சீரானது.

எனினும் இருமல் தொடர்ந்தது. கடந்த ஏப்ரல் 14-ம் தேதி இரவு பரிசோதனை முடிவு கிடைத்தது. அதில் எனக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பின் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி மீண்டும் சளிமாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன்பிறகு கோவண்டி, சிவாஜி நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். கடந்த ஏப்ரல் 19-ம்தேதி பரிசோதனை முடிவு கிடைத்தது. அதிலும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

உடற்பயிற்சி

வழக்கம் போல காலைதோறும் உடற்பயிற்சியை தொடர்ந்தேன். கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மீண்டும் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. ஏப்ரல் 26-ம் தேதி பரிசோதனை முடிவு கிடைத்தது. நான் ஆரோக்கியமாக இருந்தாலும் வைரஸ் தொற்று நீங்கவில்லை என்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்தது. ஏழு நாட்களுக்குப் பிறகு மீண்டும் சளி மாதிரி எடுக்கப்பட்டது. கடந்த மே 3-ம் தேதி முடிவு கிடைத்தது. அதில் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

மொத்தம் 3 வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அப்போது என்னோடு இருந்த 50 நோயாளிகளில் 45 பேர் சில நாட்களிலேயே இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டனர். ஊடகங்களும் சமூக வலைதளங்களும் கரோனா வைரஸ் குறித்து மக்களை அச்சுறுத்துகின்றன. இந்த போக்கை மாற்றி மக்களுக்கு நம்பிக்கையூட்டும் செய்திகளை, தகவல்களை ஊடகங்கள் வெளியிட வேண்டும்.

இஞ்சி, எலுமிச்சை

தென்னிந்தியாவில் கரோனா வைரஸ் நோயாளிகள் விரைவில் குணமடைய அவர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் இஞ்சி, எலுமிச்சை, தேன், மஞ்சள்,சுடுநீர் ஆகியவை வழங்கப்படுகிறது. நான் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் வீட்டு உணவு வகைகள் அனுமதிக்கப்படவில்லை. மருத்துவமனையில் வழங்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிட்டேன். நான் சிகிச்சை பெற்ற கரோனாசிறப்பு வார்டில் மருத்துவர்கள், நோயாளிகளை தொட்டு பரிசோதிக்கவில்லை. பாரசிட்டமால், வைட்டமின், அசிடிட்டி மாத்திரைகளை மட்டுமே வழங்கினர். இவற்றை கருத்தில் கொள்ளும்போது கரோனா நோயாளிகள் விரைவில் குணமடைய அவர்களுக்கு வீட்டில்சிகிச்சை அளிப்பதே சிறந்தது. அப்போதுதான் அவர்களின் உடல்நலனும் மன நலனும் திடமாக இருக்கும். அதிக பாதிப்புள்ளவர்களை மட்டும்மருத்துவமனையில் அனுமதிக்கலாம்.

இந்த வைரஸ் காய்ச்சல் குறித்து அச்சப்பட தேவையில்லை. நமது நாட்டில், கரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்பு 3.3 சதவீதமாக மட்டுமே உள்ளது. மீதமுள்ள 96 சதவீத நோயாளிகள் எவ்வித பாதிப்பும் இன்றி நலமாக உள்ளனர். விரைவில் குணமடைகின்றனர். இவ்வாறு டோனி தெரிவித்துள்ளார்.

தைரியமாக இருந்தால் குணமடையலாம்

ஒருவேளை உங்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் நீங்கள் அச்சமடையக் கூடாது. இது சாதாரண புளூ காய்ச்சல் போன்றதே. உங்கள் உடல் இந்த காய்ச்சலை எதிர்கொள்ளும் வலிமை கொண்டது. நீங்கள் தைரியமாக இருந்தால் வைரஸ் தொற்றில் இருந்து விரைவில் குணமடையலாம். ஒருவேளை நீங்கள் அச்சப்பட்டால், அதிர்ச்சி அடைந்தால் வைரஸ் தொற்று பெரும் சவாலாக மாறிவிடும் என்று டோனி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x