

கேரளாவில் மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. சில மாநிலங்களில் பரவி வருகிறது. கேரளாவில் கட்டுக்குள் இருந்தநிலையில் மேலும் 16 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “கேரளாவில் இன்று மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கேரளாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 80 ஆக உள்ளது. மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பில் 42,287 பேர் வீடுகளிலும், 538 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். கரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இது கவலைக்குரியது. எனவே நாம் இன்னும் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது, அவர்கள் அவ்வாறு செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.” எனக் கூறினார்.