ஹரியாணாவில் மீண்டும் பேருந்துகள் இயங்கத் தொடங்கின: தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில் மட்டும் சேவை

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

ஹரியாணாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு கடந்த மார்ச் இறுதி வாரத்தில் கொண்டு வரப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கினால் நிறுத்தப்பட்டிருந்த பல்வேறு பணிகள் ஒவ்வொன்றாகத் தொடங்கியுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்படுவதால், இன்று முதல் சோதனை அடிப்படையில் மாநிலத்தில் பொதுப் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று ஹரியாணா முதல்வர் எம்எல் கட்டார் அறிவித்திருந்தார்.

கோவிட் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படாது என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து ஹரியாணா மாநில அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களை நெருங்கிவரும் வேளையில் ஹரியாணாவில் இன்று முதல் மீண்டும் பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன. மாநிலத்தின் சாலை வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில் மட்டும் பேருந்து சேவையை மீண்டும் தொடங்கின.

இப்பேருந்துகளில் சமூக இடைவெளியைப் பராமரிக்க 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்படாது. 52 இருக்கைகள் கொண்ட பேருந்துகளில் 30 பயணிகள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்துகள் ஹரியாணா மாநிலப் போக்குவரத்து முனையத்திலிருந்து (டெர்மினஸ்) திட்டமிடப்பட்ட பேருந்து நிறுத்தங்களுக்குச் செல்லும். வழியில் எந்தப் பயணியும் பேருந்தில் ஏறவோ அல்லது இறங்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஹரியாணா சாலைவழிப் பேருந்துகளில் ஏறும் பயணிகளுக்கு ஆன்லைன் முன்பதிவு மற்றும் முகக்கவசம் அணிவது அவசியம்.

பேருந்து முனைங்களில் பயணிகளுக்கு வெப்பநிலைப் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களின் கைகள் சுத்திகரிக்கப்பட்டன. பேருந்தில் ஏறுவதற்கு முன்பு பயணிகள் முகக்கவசம் அணிந்திருப்பது ஹரியாணா சாலைவழி அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது. பேருந்து முனையங்கள் சுத்திகரிக்கப்பட்டுள்ளன. வழக்கமான, குளிரூட்டப்படாத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

ஆரம்பத்தில், பேருந்துகள் அம்பாலா, பிவானி, ஹிசார், கைதல், கர்னல், நர்னால், பஞ்ச்குலா, ரேவாரி, ரோஹ்தக் மற்றும் சிர்சா ஆகிய பத்து டிப்போக்களிலிருந்து 29 வழித்தடங்களில் செல்லும். தேர்ந்தெடுக்கப்பட்ட பாயிண்ட் டூ பாயிண்ட் பாதைகளில் இப்பேருந்துகள் இயங்கும். இதற்கான 23 பணிமனைகளில் 4,000 பேருந்துகள் தயாராக உள்ளன. இருப்பினும், சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட முதல் நாளில் சில பேருந்துகளில் 12-15 பயணிகள் மட்டுமே காணப்பட்டனர்''.

இவ்வாறு ஹரியாணா மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு நல்ல நடவடிக்கை: பயணிகள் கருத்து

பஞ்ச்குலா பணிமனையில் இருந்து, முதல் பேருந்து சிர்சாவிற்கு காலையில் புறப்பட்டது. சிர்சாவுக்குச் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர், ''பேருந்து சேவையை மீண்டும் தொடங்குவது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒரு நல்ல நடவடிக்கை'' என்றார்.

இன்னும் சில பயணிகள் கூறுகையில், ''பேருந்துகள் முழு கொள்ளளவோடு நிறைய பயணிகளுடன் இயக்க அனுமதிக்கப்படவில்லை என்பதும் சமூக இடைவெளியை உறுதி செய்வதும் ஒரு நல்ல விஷயம்'' என்று கருத்து தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in