Last Updated : 15 May, 2020 01:14 PM

 

Published : 15 May 2020 01:14 PM
Last Updated : 15 May 2020 01:14 PM

விமானப் பயணிகள் அனைவரும் கைப்பையில் சானிடைசர் எடுத்து வரலாம்: விமானப்போக்குவரத்து அமைச்சகம் அனுமதி

கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளதையடுத்து விமானப் பயணிகள் அனைவரும் தங்கள் கைப்பைகளில் கைகளைச் சுத்தப்படுத்தும் திரவத்தை (சானிடைசர்) எடுத்து வரலாம் என விமானப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்தும், சர்வதேசப் பயணிகள் விமானப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. அதேசமயம் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மட்டும் வந்தே பாரத் மிஷன் மூலம் ஏர் இந்தியா விமானத்தில் அழைத்து வரப்படுகின்றனர்.

விமானத்தில் வெடிக்கும் பொருள், எளிதில் தீப்பற்றும் பொருள், லைட்டர், தீப்பெட்டி போன்ற பொருட்களைப் பயணிகள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. ஆனால், கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பயணிகள் கைகளைச் சுத்தப்படும் சானிடைசர் அதிகபட்சமாக 350 மி.லி. அளவுக்கு எடுத்து வரலாம் என விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விமானப் போக்குவரத்து ஆணையம் ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில், “கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் கைகளில் சானிடைசர் தடவுவது அவசியம். ஆதலால், விமானத்தில் பயணிக்கும் பயணிகள் பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்புதலுடன் அதிகபட்சமாக 350 மி.லி. அளவுக்கு சானிடைசரைக் கைப்பையில் வைத்துக்கொள்ளலாம். இந்த நடைமுறை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இந்த அறிவிப்பு அடுத்த 3 மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இருக்கும் விதிமுறைகள்படி பயணிகள் நீர்மத்தன்மை உடைய பொருள், பேஸ்ட் போன்ற பொருட்களை அதிகபட்சமாக 100 மி.லி. அளவுக்கு எடுத்து வரலாம்.

கைகளைச் சுத்தப்படுத்தும் சானிடைசர் எளிதில் தீப்பற்றும் பொருள் என அறிந்தும் கரோனா வைரஸ் தடுப்பு காரணமாக, குறைந்த அளவு எடுத்து வர விமானப் போக்குவரத்துத் துறை அனுமதித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x