

கரோனா வைரஸால் இந்தியாவுக்குள் வரமுடியாமல் வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை அழைத்துவரும் வந்தேபாரத் மிஷனின் 2-வது கட்டம் நாளை (சனிக்கிழமை, மே 16) தொடங்கி வரும் 22ம் தேதி வரை நடக்கிறது.
இந்த 2-வது கட்ட வந்தேபாரத் மிஷன் திட்டத்தில் 21 நாடுகளில் இருந்து 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டஇந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் இந்தியாவுக்குள் வரமுடியாமல் பல்வேறு நாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவர வந்தேபாரத் மிஷன் தி்ட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கடல்மார்க்கமாக கப்பற்படைக் கப்பல்கள் சமுத்திர சேது திட்டத்தை செயல்படுத்தி வெளிநாடுகளில் சி்க்கியவர்கள் மீட்டு வரப்படுகின்றனர்.
கடந்த 7-ம் தேதி முதல் 14-ம் ேததிவரை முதல்கட்டமாக செயல்படுத்தப்பட்ட வந்தே பாரத் மிஷன் தி்ட்டம் மூலம் வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன், அமெரிக்கா, பிலி்ப்பைன்ஸ், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 15 ஆயிரம் இந்தியர்கள் 64 விமானங்கள் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்டனர்.
இந்நிலையில் 2-வது கட்ட வந்தேபாரத் மிஷன் திட்டம் நாளை(16-ம்தேதி) தொடங்கி 22-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 21 நாடுகளில் இருந்து 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் “ வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை அழைத்துவரும் வந்தேபாரத் மிஷன் 2-வது கட்டம் வரும் 16-ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. இந்த முறை ஓசிஐ அட்டை வைத்திருக்கும் இந்தியர்களும் அழைத்துவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த 2-ம் கட்ட மீட்புப்பணியில் இந்தோனேசியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, கனடா, ஜப்பான், நைஜிரியா, கஜகஸ்தான், உக்ரைன், கிர்கிஸ்தான், பெலாரஸ், ஜார்ஜியா, தஜிகிஸ்தான், ஆர்மீனியா உள்ளிட்ட 21 நாடுகளில் இருந்து 32ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அழைத்து வரப்பட உள்ளார்கள்.
இந்தியர்களை வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரும் அளவுக்கு உள்நாட்டில் தனிமைப்படுத்தும் இடங்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தி வருகிறோம். இதுவரை 1.88 லட்சம் இந்தியர்கள் இந்தியாவுக்கு வர பதிவு செய்துள்ளனர். மத்திய அரசின் கொள்கையின்படி, கட்டாயமான காரணங்கள் உள்ளவர்கள் மட்டுமே முதலில் முன்னுரிமை அளி்க்கப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர்.
அந்த வகையில் கர்ப்பிணி்ப்பெண்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், விசா காலம் முடிந்தவர்கள், வேலையிழந்தவர்கள் மட்டுமே அழைத்துவரப்படுகிறார்கள். வந்தேபாரத் மிஷன் திட்டம் மிகப்பெரிய அளவிலான மீட்பு நடவடிக்கை மிகவும் சிக்கலானது என்பதால் மிகவும் கவனத்துடன் செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்