

கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இருமுடிகட்டி நுழைய முயன்று சர்ச்சையை ஏற்படுத்திய பெண்ணியவாதி ரெஹானா பாத்திமாவுக்கு கட்டாய ஓய்வை வழங்கி பிஎஸ்என்எல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த 2018-ம்ஆண்டு ெசப்டம்பர் மாதம் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பைத் தொடர்ந்து ஹைதராபாத்தைச் சேர்ந்த மோஜோ தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றிய பத்திரிகையாளர் கவிதாவும், பெண்ணியவாதி ரெஹானா பாத்திமா என்பவரும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடிகட்டி போலீஸ் பாதுகாப்புடன் அக்டோபர் மாதம் நுழைய முயன்றனர்.
ஆனால், பக்தர்கள், தந்திரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவர்களைக் கீழே இறக்கக் கேரள அரசு உத்தரவிட்டது. இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கொச்சி பனம்பள்ளி நகரில் உள்ள ரெஹானா பாத்திமாவின் வீட்டை சமூக செயற்பாட்டாளர்கள் தாக்கி சேதப்படுத்தினார்கள். இந்தச் சூழலில்,ரெஹானா பாத்திமா பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் கொச்சியில் உள்ள போட்ரெட்டி கிளையில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றி வந்தார்.
சபரிமலை விவகாரத்தில் தீவிரமாக ஈடுபட்டதைத் தொடர்ந்து அவரை பழரவிட்டம் நகரில் உள்ள கிளைக்கு இடமாற்றம் செய்து கடந்த 2018-ம் ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனாலும் ரெஹானா பாத்திமா தொடர்்ந்து தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுகள புண்படுத்தும் வகையில் தொடர்ந்து எழுதிவந்ததால் அவரை பிஎஸ்என்எல் நிர்வாகம் கட்டாய ஓய்வில் செல்ல உத்தரவி்ட்டுள்ளது
ஆனால் பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் செல்லப்போவதாகவும், இந்த உத்தரவுக்கு பின்னால் அரசியல் அழுத்தம் இருக்கிறது என்று ரெஹானா பாத்திமா குற்றம்சாட்டியுள்ளார்
இதுகுறித்து பிஎஸ்என்எல் துணை இயக்குநர் பிறப்பித்த உத்தரவில், “ பிஎஸ்என்எல் பழவிரட்டம் கிளையில் பணிபுரிந்து வரும் ரெஹானா பாத்திமா கடந்த 2018-ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயன்றது தொடர்பாக மீதான பல்வேறு புகார்கள் வந்தன. மேலும் குறிப்பிட்ட மதத்தினரை புண்படுத்தும் வகையில் தொடர்ந்து முகநூல் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டார்.
இது தொடர்பாகவும் புகார்கள் வந்தன. பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அலுவலரான பாத்திமா மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். பிஎஸ்என்எஸ் நிர்வாகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவர் நிறுவனத்தின் நலனுக்காகத்தான் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற செயல்பாடுகள் ஒழுக்கக்கேடாகவும், நிறுவனத்துக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும்.
ஆதலால், பாத்திமா மீதான அலுவலக ரீதியான விசாரணைக் குழுவின் முடிவின்படி பாத்திமாவின் செய்பாடுகள் தற்செயலானவை அல்ல, உள்நோக்கத்துடன் இருந்தது எனத் தெரியவந்தது. ஆதலால், ரெஹானா பாத்திமாவுக்கு கட்டாய ஓய்வை அளிக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது