

மகாராஷ்டிர சட்ட மேலவையில் (எம்எல்சி ) மொத்தம் 9 இடங்கள் ஏப்ரல் 24-ம் தேதி காலியானது. அந்த இடங்களுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே, நீலம் (சிவசேனா), பாஜக வேட்பாளர்கள் ரஞ்சித் சிங் மொஹித் பாட்டீல், கோபிசந்த் படால்கர், பிரவீண் தட்கே, ரமேஷ் கராத், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசிகாந்த் ஷிண்டே, அமோல் மிட்கரி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ் ரத்தோட் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அரசு அதிகாரி தெரிவித்தார்.
வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நேற்று மாலை 3 மணியுடன் முடிந்தது. 9 இடங்களுக்கு 9 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்ததால், நேற்றே தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சிவசேனா கட்சியின் தலைவராகவும் உள்ள உத்தவ் தாக்கரே (59) இந்த தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து எம்எல்சியாக சட்டமன்றத்தில் இடம் பெறுகிறார். கடந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அப்போது அவர் எம்எல்ஏவாகவோ எம்எல்சியாகவோ இல்லை. எனவே, அரசியல் சாசன சட்டப்படி முதல்வராக பதவியேற்ற 6 மாதங்களில் (மே 27ம் தேதிக்குள்) எம்எல்ஏ அல்லது எம்எல்சியாக அவர் தேர்வாக வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.