

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்கெனவே தனது ஒரு மாத ஊதியத்தை பிஎம்கேர்ஸ் அறக்கட்டளைக்கு அளித்துவிட்ட நிலையில், அடுத்த ஓர் ஆண்டுக்கு தனது ஊதியத்தில் 30 சதவீதத்தை பிஎம்கேர்்ஸ் நிதிக்கு அளிப்பதாக இன்று அவர் அறிவித்துள்ளார்
மேலும், குடியரசுத் தலைவர் மாளிகையில் செலவுகளைக் குறைத்து, சிக்கனத்தைக் கடைபிடித்து, கரோனா நிவாரணத்துக்கு உதவுவதாக குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்
கரோனா வைரஸுக்கு எதிராக போராடத் தேவையான, அவசரகால நிதிக்கான பிஎம்கேர்ஸ் அறக்கட்டளையை வலுப்படுத்தும் விதமாக குடியரசுத்தலைவர் தனது பங்களிப்பை அதிகப்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சிக்கனத்தை கடைபிடிப்பதிலும், வீண் செலவுகளை தவிர்த்தலிலும் நாட்டுக்கு உதாரணமாக குடியரசுத் தலைவர் மாளிகை இருக்க வேண்டும், அதன் மூலம் சேமிக்கும் நிதி கரோனா வைரஸுக்கு எதிரான போருக்காக பயன்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
இந்த தேசம் தற்சார்பு பொருளாதாரமாக மாறும் முயற்சிக்கும், கரோனாவுக்கு எதிரான போருக்கும் குடியரசுத் தலைவர் மாளிகை சார்பிலும், தன்னுடைய சார்பிலும் சிறு பங்களிப்பாகஇருக்கும் என ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குடியரசுத்தலைவர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
இதன்படி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடப்பு ஆண்டில் எந்தவிதமான புதிய கட்டிடப்பணிகளும் நடக்காது, ஏற்கெனவே நடந்து வரும் பணிகள் மட்டுமே நடக்கும்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் பராமரிப்பு பணிகள், பழுதுநீக்கும் பணிகள் போன்றவை இந்த ஆண்டு குறைக்கப்பட்டு செலவு மிச்சப்படுத்தப்படும். மின்சிக்கனம், தொழில்நுட்பங்களை அதிகமாகப் பயன்படுத்தி வளங்களை மிச்சப்படுத்தும் முயற்சி எடுக்கப்படும்
விருந்துகள், முக்கிய விழாக்களுக்குக் குடியரசுத்தலைவர் செல்ல லிமோசைன் சொகுசு கார் வாங்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தி்ட்டமிட்டிருந்தார், அந்த திட்டத்தை ஒத்திவைத்துள்ளார். ஏற்கெனவே பயன்படுத்தும் காரையே பயன்படுத்திக்கொள்ளவும் முடிவு செய்துள்ளதாக ராம்நாத் கோவி்ந்த் தெரிவித்துள்ளா்
உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் பயணங்கள், நிகழ்ச்சிகள் குறைக்கப்பட்டு, சமூக விலகலை கடைபிடிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் குடியசுத் தலைவர் முடிவு செய்துள்ளார் அதற்கு பதிலாக நிகழ்ச்சிகளில் காணொலி மூலம் பங்கேற்கவும் ராம்நாத் கோவிந்த் தி்ட்டமி்ட்டுள்ளார்
குறிப்பாக விருந்துகள், பண்டிகைகளின்போது நடத்தப்படும் விருந்துகளின் செலவைக் குறைத்து, குறைந்த அளவு விருந்தினர்களை மட்டும் அழைக்கவும், அதன் மூலம் சமூக விலகலைக் கடைபிடிக்கவும் குடியரசுத்தலைவர் திட்டமிட்டுள்ளார். இதுபோன்ற விழாக்கள், சிறப்பு நிகழ்ச்சிகளில் மலர்கள் பயன்பாடு, மேடை அலங்காரம் ஆகியவற்றை சிக்கனமாக செய்தல், உணவுப்பட்டியலைக் குறைத்தல் போன்ற சிக்கன நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது
இந்த சிக்கன நடவடிக்கையால் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு நடப்பு நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் 20 சதவீதம் சேமிக்க முடியும். இந்த சிக்கன நடவடிக்கையால் ஒப்பந்த தொழிலாளர்களைப் பயன்படுத்துவதாலும் எந்தவிதமான பாதகமான தாக்கமும் ஏற்படாது. அதேசமயம் குடியரசுத் தலைவர் மாளிகை மூலம் ஏழை மக்களுக்கு அளிக்கும் உதவியில் எந்த விதமான தடங்கலும் ஏற்படாது
இவ்வாறு குடியசுத்தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது