

உ.பி. நெடுஞ்சாலை ஒன்றில் நடைபயணமாகச் சென்ற பிஹாரைச் சேர்ந்த ஆறு பேர் முசாஃபர் நகர் அருகே சாலை விபத்தில் பலியான துயரச் சம்பவம் நேற்றிரவு நடந்தது, இது தொடர்பாக பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் தந்தை, மகன் இருவரையும் இழந்து புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பம் ஒன்று வாடுகிறது.
பல்வேறு விதிமுறைகளும் காத்திருக்க வேண்டிய அவசியம் இருப்பதால் இந்த ரயில் பயண வாய்ப்பு பெரும்பாலான புலம் பெயர் தொழிலாளர்களுக்குக் கிடைப்பதில்லை. அரசின் உதவியைப் பெறுவதில் காலதாமதம் ஆகும் நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் நடைபயணத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் நெடுஞ்சாலைகளில் நடைபயணம் என்பது எமனை எதிர்கொள்வதாக மாறி வருகிறது.
இந்நிலையில்தான் பஞ்சாபிலிருந்து பிஹார் நோக்கி கால்நடையாகப் புறப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 9 பேர் மீது முசாபர் நகரில் உ.பி. பேருந்து மோதியதில் 6 பேர் பலியாகினர் 3பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த துயரச் சம்பவம் தொடர்பாக பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநர் ராஜ்பிர் கைது செய்யப்பட்டுள்ளார், அவரது மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் அவர் மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கியது உறுதி செய்துள்ளன என்று மூத்த போலீஸ் அதிகாரி அபிஷேக் யாதவ் தெரிவித்தார்.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்தச் சம்பவம் தொடர்பாக ஆழந்த இரங்கல்களை தெரிவித்ததோடு இறந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடும், காயமடைந்தோருக்கு ரூ.50,000மும் அறிவித்துள்ளார்.
ஷரன்பூர் கமிஷனர் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் யோகி உத்தரவிட்டார்.
பலியானவர்கள் போஜ்பூரைச் சேர்ந்த குட்டு (18), விரேந்திர சிங் (28), ஹரேக் சிங் (52), இவரது மகன் விகாஸ் (22), வாசுதேவ் (22), ஹரிஷ் சஹானி (42) ஆகியோர்களாவார்கள்.