

கரோனா வைரஸிலிருந்து குணமடைந்த பின்பும் 40 நாட்களுக்கும் மேலாக டெல்லியின் பல்வேறு தனிமைப்படுத்தும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் 3,288 பேரை விடுவிக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமூக நல ஆர்வலர் ஷாகிபா குவாத்ரி சார்பில் வழக்கறிஞர் ஷாகித் அலி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
இந்த மனுவில் ஷாகிபா குவாத்ரி கூறியிருப்பதாவது:
''டெல்லி நிஜாமுதீன் தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் 3,300 பேருக்கு கரோனா இருப்பதாகக் கண்டறிவதற்காக அவர்கள் டெல்லி அரசின் பல்வேறு தனிமைப்படுத்தும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குரிய 14 நாட்கள் தனிமைப்படுத்தும் காலம் முடிந்து யாரும் விடுவிக்கப்படவில்லை.
கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகாத நிலையில் அவர்களைப் பல்வேறு தனிமை முகாம்களில் அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதமாகும். பல்வேறு முகாம்களில் தங்கியிருக்கும் தப்லீக் உறுப்பினர்கள் அதிகாரிகளுக்குக் கடிதம் அளித்தும் அதைப் பற்றி அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அதிகாரிகள் தங்களின் கடமையை மறந்து, தனிமைப்படுத்தும் முகாம் எனும் பெயரில் மத்திய அரசின் விதிகளை மீறி நடக்கின்றனர்.
தப்லீக் ஜமாத் உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று இல்லை எனத் தெரிந்தும் அவர்கள் தனிமை முகாம்களில் அடைத்து வைக்கக் காரணம் என்ன. அவர்களுக்கு நடத்தப்பட்ட 3 பரிசோதனையில் நெகட்டிவ் என வந்து பின் வெளியே அனுப்ப அனுமதிக்கவில்லை.
மேலும், தனிமை முகாம்களில் வைக்கப்பட்டிருந்த தப்லீக் உறுப்பினர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து விசாரிக்க வேண்டும்.
கடந்த 6-ம் தேதி டெல்லி அரசு பிறப்பித்த உத்தரவில், தனிமை முகாம்களி்ல் இருக்கும் தப்லீக் ஜமாத் உறுப்பினர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லாவிட்டால் அவர்கள் வீட்டுக்குச் செல்லலாம் என அறிவித்துள்ளது. ஆதலால் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தப்லீக் ஜமாத் உறுப்பினர்களை விடுவிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு அந்த மனுவி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.