

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு அலுவலகங்களில் கொண்டுவரப்பட்ட வீட்டிலிருந்து வேலை நடைமுறையை ஊரடங்குக்குப் பிறகும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கரோனா வைரஸ் அல்லது கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த மார்ச் 25 அன்று நாடு தழுவிய ஊரடங்கு விதிக்கப்பட்டது. தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 அன்று முடிவடையும். ஊரடங்கு தொடங்கியவுடன், அனைத்து அரசாங்க மற்றும் தனியார் அமைப்புகளும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையைத் தேர்ந்தெடுத்தன.
இந்நிலையில் மத்திய அரசு அலுவலகங்களில் எதிர்காலத்தில் மாறுபட்ட வருகைப்பதிவு மற்றும் மாறுபட்ட வேலை நேரங்களை தொடர்ந்து செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான அரசாங்க அலுவலகங்கள் மற்றும் அமைச்சகங்கள் சுமார் 30 சதவீத ஊழியர்கள் மற்றும் துணைச் செயலாளர் நிலை அதிகாரிகள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் வரையறுக்கப்பட்ட ஊழியர்களுடன் பணியாற்றத் தொடங்கப்பட்டன.
கடந்த செவ்வாய் அன்று பிரதமர் மோடி தனது நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது மே 18 முதல் நான்காம் கட்ட ஊரடங்குக்கு வாய்ப்புள்ளது போன்ற ஒரு செய்தியைக் குறிப்பிட்டார். பிரதமர் மோடி உரையாற்றிய இரண்டு நாட்களுக்குப் பிறகு மத்திய பணியாளர் அமைச்சகம் வீட்டிலிருந்து வேலை என்பதை நடைமுறைப்படுத்த ஒரு குறிப்பாணையை புதன்கிழமை வெளியிட்டது. இந்தக் குறிப்பாணை அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும் மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
இக்குறிப்பாணையில், ''சமூக இடைவெளி மற்றும் சுமுகமான பணிகளைப் பேணுவதற்கான நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்காக ஊரடங்குக்குப் பின்னரும்கூட இந்த நடைமுறை பின்பற்றப்படும், மேலும் தகவல்களின் பாதுகாப்பு, அரசாங்க கோப்புகள் மற்றும் தகவல்களைக் கையாள்வது குறித்து தொலைவிலிருந்து அணுகும்போது உறுதி செய்யப்படும்.
எதிர்காலத்தில், மத்திய செயலகம் தொடர்ந்து மாறுபட்ட வருகைப்பதிவு மற்றும் பணியிடத்தில் சமூக இடைவெளியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக மாறுபட்ட வேலை நேரங்களில் தொடர்ந்து செயல்படும். ஆகையால், வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான ஒரு பரந்த கட்டமைப்பானது, செயல்பாட்டு நடைமுறையை பிந்தைய ஊரடங்கு சூழ்நிலையைக் கூட தரப்படுத்துவதற்கும், தகவல்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு முக்கியமானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர் பொது குறைதீர் பிரிவு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் உள்ள நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைதீர் பிரிவு துறையிலிருந்து அனைத்து அமைச்சகங்கள் மற்றும் மத்திய அரசுத் துறைகள் வரை அனைத்து அதிகாரிகளுக்கும் வீட்டிலிருந்து வேலைக்கான ஆலோசனைக் கடிதங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்தக் குறிப்பாணை ஆலோசனைக்கான ஒரு வரைவுதான், அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த வரைவு குறித்து அவர்கள் பதிலளிக்க வேண்டும். மே 21 ஆம் தேதிக்குள் வீட்டிலிருந்து இருந்து வேலை செய்வது குறித்து பணியாளர் அமைச்சகத்திடம் தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும், மே 21-ம் தேதிக்குள் கருத்துகள் பெறப்படாவிட்டால், உங்கள் அமைச்சகமும் துறையும் முன்மொழியப்பட்ட வரைவுடன் உடன்படுகின்றன என்று கருதப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.