

கரோனா வைரஸ் காலத்தில் ரயில்வே அமைச்சகம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு ரயிலில் அடுத்த வாரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரயி்ல்வேக்கு ரூ.45.30 கோடி வசூலாகியுள்ளது.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதியிலிருந்து பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 40 நாட்களுக்கும் மேலாக ரயில்வே சேவை தொடங்காத நிலையில் கடந்த 12-ம் தேதி முதல் டெல்லியிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
புதுடெல்லியிலிருந்து இயக்கப்படும் 15 ரயில்கள், திப்ரூகார்க், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேஷ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மட்கான், மும்பை, அகமதாபாத், ஜம்மு தாவி ஆகிய நகரங்களுக்குச் செல்கின்றன.
அனைத்துப் பெட்டிகளும் குளிர்சாதன வசதி கொண்டு, குறைந்த அளவு நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும். ராஜ்தானி ரயில் கட்டணத்துக்கு இணையாக இருக்கும். ஏசி 3 அடுக்குப் படுக்கையில் 52 பயணிகளும், 2-ம் வகுப்பில் 48 பயணிகளும் மட்டுமே சமூக விலகலைக் கடைப்பிடித்துப் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என ரயில்வே தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை முதல் இதுவரை சிறப்பு ரயிலில் 20 ஆயித்து 149 பயணிகள் பயணித்துள்ளனர். இன்றுமுதல் 7 நாட்களுக்கு இயக்கப்பட உள்ள 18 சிறப்பு ரயில்களில் 25 ஆயிரத்து 737 பேர் பயணிக்க உள்ளனர். இதன் மூலம் ரயில்வேக்கு ரூ.45.30 கோடி கிடைத்துள்ளது.
டெல்லியிலிருந்து நேற்று ஒரே நாளில் 9 ரயில்கள் புறப்பட்டு ஹவுரா, திருவனந்தபுரம், ஜம்மு, மும்பை, அகமதாபாத், ராஞ்சி, திப்ருகார், சென்னை ஆகிய நகரங்களுக்குச் சென்றன. அனைத்து ரயில்களிலும் பயணிகள் எண்ணிக்கை நிறைந்து சென்றது. பிஹார் தலைநகர் பாட்னாவுக்குச் சென்ற ரயிலில் மட்டும் கூட்டம் இல்லை. இன்று டெல்லியிலிருந்து 8 சிறப்பு ரயில்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “அதிகமான முன்பதிவு என்பதால் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. பல பயணிகள் பல்வேறு நிறுத்தங்களில் இறங்கி விடுவார்கள். அந்த அடிப்படையில் முழுவதும் நிறைந்துள்ளது. பிஹார் ரயிலில் மட்டும் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. ஏனென்றால் ஏற்கெனவே அந்த மாநிலத்துக்கு 100 ரயில்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டதால் கூட்டம் குறைந்து காணப்பட்டது” எனத் தெரிவித்தார்.